தமிழ் சினிமாவில் என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம்.கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்சில் வெளியிட திட்டமிட்டபோது, அவருடைய படத்தை தியேட்டரில் திரையிடமாட்டோம் என்று அறிவித்தார்கள். இதனால், ‘என்னை தொழில் செய்யவிடாமல் தடுத்தார்கள்’ என்று, தியேட்டர் சங்க நிர்வாகிகள் சிலர் மீது, இந்திய போட்டிக் கழகத்தில் வழக்கு தொடர்ந்தார் கமல். இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கமலுக்கு சாதகமான தீர்ப்பு வரும் சூழல் இருக்கிறது. அந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொன்னார்கள். அல்லது நிர்வாகிகளுக்கு அந்த அமைப்பு அபராதம் விதித்தால், நீங்கள்தான் கட்ட வேண்டும் என்றார்கள். அதற்கு கமல் மறுத்ததால், ‘உத்தம வில்லன்’ படத்துக்கு ‘ரெட்’ போடுதல், ‘தனி நபர் மிரட்டல்’ நடந்திருக்கிறது.தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பாலமாக இருந்த வினியோகஸ்தர் கள் சங்கம் பலவீனமான பிறகு தியேட்டர் அதிபர்களின் கை ஓங்கியது. இதற்கு முக்கியமான காரணம், தயாராகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து, தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்ததுதான்.
படத் தயாரிப்புக்கும், அதன் திரையீடுக்கும் இருக்கும் இடைவெளியைத்தான் தியேட்டர் அதிபர்கள் தங்கள் அதிகார மையமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.“மிகப் பெரிய பட்ஜெட்டில் முன்னணி ஹீரோ நடித்த ஒரு படம் வெளிவருகிறது. அது சுமார் 40 கோடி செலவில் எடுத்த படம் என்று வைத்துக்கொள்வோம். படத்தின் ஹீரோவுக்கு கிடைக்கும் ஓப்பனிங் கலெக்ஷன், அப்படம் எப்படியும் இரு வாரம் ஓடினால் கிடைக்கும் கலெக்ஷன் என இவற்றை கணக்கிட்டு, தியேட்டர்காரர்கள் ‘எம்.ஜி’ எனப்படும் மினிமம் கியாரண்டிக்கு படம் வாங்கிக்கொள்வார்கள். அப்படம் ஓடினால் தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம். ஆனால், அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்கள் நினைத்த அளவுக்கு கலெக்ஷன் ஆகவில்லை எனில், ஒப்பந்தப்படி கேட்கக்கூடாது என்றாலும் கூட, சம்பந்தபட்டவர்களிடம் நஷ்டஈடு கேட்பார்கள்.
அப்படித்தான் ‘லிங்கா’ படத்துக்கு கேட்டார்கள். தவிர, படம் வெளியான இரண்டு மூன்று நாட்களுக்கு டிக்கெட் கட்டணத்தை அதிகமாக வசூல் செய்துகொள்வார்கள். ஆனால் நஷ்ட கணக்கோ, லாப கணக்கோ காட்டும்போது, டிக்கெட் கட்டணம் மட்டுமே கணக்கில் காட்டப்படும். கூடுதலான கட்டணங்கள் எந்த கணக்கிலும் வராது” என்கிறார், ஒரு முன்னணி வினியோகஸ்தர்.இது பெரிய படங்களின் நிலை என்றால், சிறிய படங்களின் நிலை இன்னும் பரிதாபமானது. சிறு பட்ஜெட் படங்களை தயாரிப்பாளர்களே நேரடியாக வெளியிடுகின்ற நிைலமை இருக்கிறது.‘‘தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த தியேட்டர்களும் ஒருசிலரின் கையில் உள்ளது. அவர்களும், தியேட்டர் அதிபர் களும் சிண்டிகேட் அமைத்து இருக்கிறார்கள். வீடுகளை விற்று, வட்டிக்கு வாங்கி படம் எடுத்து திரையிட சென்றால், டெபாசிட் கேட்கிறார்கள்.
ஒரு ஷோவுக்கு 40 டிக்கெட் எடுக்க சொல்கிறார் கள். இது வழிப்பறிக்கு சமமானது. குடும்பத்துடன் தியேட்டருக்கு வருபவர்களை குற்றவாளிகள் போல் பரிசோதித்து, அவர்களிடம் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை கூட வாங்கி எறிகிறார்கள். கேன்டீன் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கிறார்கள். பிறகு எப்படி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்?” என்கிறார், சிறு பட தயாரிப்பாளர் ஒருவர்.“சில தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் சாதாரணமாக பத்து ரூபாய் என்றால், பெரிய படங்கள் வரும் முதல் நான்கு நாட்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை இரண்டு மடங்காக்கி விடுவார்கள்.
சென்னையிலுள்ள சில வணிக வளாகங்களில் மணிக்கணக்கில்தான் பார்க்கிங் கட்டணம். 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்க சென்றால், அதில் இன்னும் 60 ரூபாய் பார்க்கிங் கட்டணத்துக்கு செலவிட வேண்டியது இருக்கும். கார் என்றால், டிக்கெட்டுக்கான கட்டணத்தை விட பார்க்கிங்கிற்கு அதிகம் கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று சொல்கிறார், மேலும் அவர்.பெரிய படங்கள் என்றால், வசூலில் 90 சதவிகிதம் தயாரிப் பாளர்கள் அல்லது வினியோகஸ்தர்களுக்கு. 10 சதவிகிதம் தியேட்டர்காரர்களுக்கு. பெரிய படங்களுக்கு கூட்டம் அலைமோதினால், பார்க்கிங் மற்றும் கேன்டீனில் கலெக்ஷனாகி விடும். நடுத்தரப் படங்கள் என்றால் பிப்டி, பிப்டி ஷேர்.
சிறுபட்ஜெட் படங்கள் என்றால், அவர்களிடம் டெபாசிட் வாங்கி திரையிடுவது இப்போது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்போது இதிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது, பெரிய படங்களுக்கும் இனி பிப்டி, பிப்டிதான் என்பதுதான் அது. ரஜினி, கமல் படமாக இருந்தாலும், கலெக்ஷனில் பாதி தியேட்டருக்கு என்பது இனிமேல் வரப்போகும் நடைமுறை.“பிப்டி, பிப்டி ஷேர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், இதை நடைமுறைப் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. இன்றைக்குள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு அரசு தியேட்டர் கட்டணத்தை ஒழுங்குபடுத்தினால், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதன் பிறகும் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும். நல்ல கதையம்சமுள்ள படங்கள் வர வேண்டும். பெரிய நடிகர்கள் வருடத்துக்கு 3 படங்களில் நடிக்க வேண்டும். இந்த சூழ்நிலை வந்தால் தியேட்டரும், சினிமாவும் ஆரோக்கியமாக இருக்கும்” என்கிறார், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி தர். “அப்போதெல்லாம் படத்துக்கு பூஜை போடும்போதே தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் அட்வான்ஸ் கொடுத்து விடுவார்கள். இன்று தயாரிப்பாளர்களிடம் டெபாசிட் வாங்கி, டிக்கெட் வாங்கச் சொல்லி படத்தை திரையிடுகிற தலைகீழ் மாற்றத்துக்கு சினிமா வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், படங்களின் எண்ணிக்கை பெருகி, தியேட்டர்களின் எண்ணிக்கை சுருங்கியதுதான். ஒரு வாரத்தில் 10 படங்கள் ரிலீசானால் என்ன செய்ய முடியும்?” என்கிறார், தியேட்டர் நிர்வாகி ஒருவர்.
0 comments:
Post a Comment