பெற்றோர், மருத்துவர்கள், இயற்கையிடம் ?
பழனி மலை ஏறியும், திருப்பதியில் மொட்டை அடித்தும், இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடியும் பலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். இறைவன் அருளாத பாக்கியத்தை அந்தத் தம்பதியினருக்கு மருத்துவர்கள் 'அருளி' வைத்திருக்கிறார்கள்.
கடவுளர்களுக்கு காணிக்கை கொடுத்தும், உடலை வருத்தி விரதமிருந்தும் பெற முடியாததை சிறப்பு மருத்துவ மனைகளில் பல லட்சம் செலவில் அத் தம்பதிகளால் பெற முடிந்திருக்கிறது.
ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF) முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள்.
'குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு' என இந்தியச் சட்டம் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவ மனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.
பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்; தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை.
அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது.
இனஅழிப்பு (Geneocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். ஆம். இங்கு பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன.
இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர்.
குழந்தையில் பாலியல் தேர்வு
ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும்.
இருந்தபோதும் இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. 'எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..' எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.
பிறப்பில் ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன.
தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது.
பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது.
ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன.
சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar)> பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை.
ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள்.
விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது.
எவ்வாறு செய்யப்படுகிறது
இப்பொழுது 'ரெஸ்ட் ரியூப்' முறையில் குழந்தை பெறும்போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது முடியும்.
ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஆய்வுகூடக் கோப்பையில் முட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (டிடயளவழஉலளவ) ஆகி மேலும் வளரும்.
இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை (Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.
இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை.
இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது 20,000 அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.
கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள்(Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.
பால்வழித் தேர்வும் அழிப்பும்
அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள்.
இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது 'பால்வழி அழிப்பு' என்பவர்களின் வாதமாகும்.
ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன?
ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன.
தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.
ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும். வாலிபப் பையன்களின் இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள்.
இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists) குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.
பிரச்சனைகள்
குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.
மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள் பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார்;.
ஆயினும் இவற்றிற்கு 'ஆம்' சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.
விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும்.
ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும்.
பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.
கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது.
புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும்.
இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?
குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
"ஆண் குழந்தையா பெண் குழந்தையா?
பாலினத் தேர்வு யாரிடம் இருக்க வேண்டும்?" சமகாலம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரை
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment