ரசிகர்களே கற்பனை செய்து பார்க்க முடியாத இன்ப அதிர்ச்சியாக இனிக்கப் போகிறது 2015-ன் பொங்கல். பொங்கல் மற்றும் சங்கராந்தி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு மூன்று மாஸ் நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் களத்தில் ஒரே நேரத்தில் மோதவிருக்கின்றன. இதனால் தமிழக பாக்ஸ் ஆபீஸின் நிலவரம் இப்போதே கலவரமாகிக் கிடக்கிறது. காரணம் தமிழகத்தில் மொத்தம் 963 திரையரங்குகளும் அவற்றில் 1110 திரைகளும் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ ஐ’, கௌதம் மேனன் – அஜித் கூட்டணியில் உருவாகிவரும் ‘ என்னை அறிந்தால்’, சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ ஆம்பளை’ ஆகிய மூன்று படங்களும் எவ்வளவு திரைகளைக் கைப்பற்றும்? எல்லாப் படங்களும் எதிர்பார்த்த வசூலை எட்ட முடியுமா? ரசிகர்களின் பாக்கெட் தாங்குமா என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டோம். ‘கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத் திரையரங்குகளும், ரசிகர்களும் எதிர்கொள்ளாத ‘கோல்டன் மொமெண்ட்’ என்றே 2015 பொங்கல் வெளியீட்டைச் சொல்லிவிடலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
காரணம் “பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மூன்று தினங்கள் வரிசையாக விடுமுறைகள் விடப்படுகின்றன. ரசிகர்கள் மேலும் இரண்டு தினங்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு ஐந்து நாட்களும் பொங்கலைக் கொண்டாடித் தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை அடுத்தடுத்த தினங்களில் பார்ப்பதற்குப் புதிய புதிய படங்கள் இருக்க வேண்டும். அதுவே அவர்கள் மனதுக்குப் பிடித்த இயக்குநர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்றால் எத்தனை கொண்டாடுவார்கள் என்பதை ஒரு தியேட்டர் அதிபராக அறிவேன்” என்கிறார் ஸ்ரீதர். மேலும் விக்ரம் படத்துக்கு 400, அஜித் படத்துக்கு 400, விஷால் படத்துக்கு 310 என்று திரைகளைப் பிரித்துக் கொடுப்பதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. இதனால் படங்களின் வசூலும் பாதிக்காது” என்கிறார்.
ரசிகர்களின் பாக்கெட்
இது சாத்தியம்தானா? “கடந்த பத்தாண்டுகளாகவே கிராமப் புறங்களில் உள்ள திரையரங்குகளில் கூட மாஸ் ஹீரோ படங்கள் ஒரே நாளில் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தவே செய்கிறது. படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடப் பெரும்பான்மையான உயர்தரத் திரையரங்குகளில் பிளாட்டாக உயர்த்தப்படும் நுழைவுக் கட்டணம் ரசிகர்களின் பாக்கெட்டைப் பதம் பார்க்கவே செய்யும்.
என்றாலும் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவை குறித்த கவலை எதுவுமற்று ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். காரணம் முதல் இரண்டு வாரத்துக்குத் திரையரங்குகள் நோக்கிப் படையெடுப்பவர்களில் பாக்கெட் மணியைக் கொண்டு படம் பார்க்க வரும் 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளம் ரசிகர்களே அதிகம். மூன்றாவது வாரத்திலிருந்தே ஃபேமிலி ஆடியன்ஸை ஓரளவு எதிர்பார்க்க முடியும்” என்கிறார் வலைப்பதிவரும் இயக்குநருமான கேபிள் சங்கர்.
கூட்டணி பலம்
அப்படியானால் பொங்கலைப் போர்க்களமாக்கப் புறப்பட்டிருக்கும் இந்த மூன்று படங்களில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒன்று பின்வாங்குமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை தான் தற்போது நிலவி வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் மூன்று படங்களில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜனவரி 8-ம் தேதியே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ‘கிங் ஆஃ ஓபனிங்’ என்று புகழப்பட்டும் அஜித், பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே 800 திரையரங்குகளில் வெளியாகி ஓபனிங் வசூலை அள்ளிவிட்டு, பொங்கலுக்கு 400 திரைகளாகக் குறைத்துவிடுவது என்ற திட்டத்தில் களமிறங்க இருக்கிறார்களாம். இதனால் கௌதம் மேனனுடன் முதல் முறையாகக் கூட்டணி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘என்னை அறிந்தால்’ வசூலில் பின்தங்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
எதிர்பார்ப்பில் முதலிடத்தில் இருக்கும் ‘ஐ’ படத்தை ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக்கல், கிராபிக்ஸ் தரம், ஒப்பனை, விக்ரமின் நடிப்பு, ஷங்கர் பிராண்ட் பொழுதுபோக்கு ஆகியவை படத்தைத் தீபாவளிக்கே எதிர்பார்க்க வைத்தன. ஆனால் படத்திற்கு வியாபாரத் தரப்பிலும், பின்னணி இசை சேர்ப்பு, கிராஃபிக்ஸ், விக்ரம் பேச வேண்டிய மூன்று விதமான குரல் பாணிகள் ஆகியவை காரணமாக நீண்டுகொண்டே சென்ற படத்தின் பணிகளும் படத்தைப் பொங்கலுக்குத் தள்ளிச் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டதாகச் சொல்கி றார்கள். என்னதான் இழுவையான வெளியீடு என்றாலும் ‘ஐ’ படத்துக்கான எதிர்பார்ப்பு தமிழகத்தைத் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் இந்திப்பட ஃபாக்ஸ் ஆபீஸ், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் என எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மூன்றாவதாகச் சுந்தர்.சி – விஷால் கூட்டணியின் பலமும் கம்பீரமாகவே இருக்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களால் கொண்டாடப்படும் இயக்குநராக இருக்கும் சுந்தர்.சி, அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக ‘அரண்மனை’ படத்தை இயக்கியிருந்தார். வசூல் சாதனை படைத்த இந்தப் படத்தில் கதையும் காட்சியமைப்புகளுமே ரசிகர்களை தியேட்டருக்குக் கூட்டம் கூட்டமாக இழுத்தது.
அதேபோல விஷால் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்கள் தொடர்வெற்றியைச் சந்தித்திருக்கின்றன. மேலும் ஏ.வி.எம். நிறுவனத்தைப் போல ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்து, சொன்ன தேதியில் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் விஷால். இதனால் சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஆம்பளை’ படம் ஆரம்பிக்கும்போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்துப் படத்தை முடிக்கும் கட்டத்தில் இருப்பதால், “ஆம்பளை பொங்கல் போட்டியிலிருந்து வெளியேறும் என்ற பேச்சுக்கு இடமில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார் விஷால்.
ஒட்டுமொத்தமாகப் பொங்கல் தினத்தில் ஆரம்பித்து அடுத்துவரும் மூன்று நாட்களிலும் ரசிகர்கள் பொங்கல் சினிமா பார்த்துச் செலவழிக்க இருக்கும் தொகை ஒட்டு மொத்தமாக ரூ.120 கோடி என்று உத்தேசமாகக் கணக்கிட்டுச் சொல் கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புலிகள். (The Hindu)
0 comments:
Post a Comment