மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
‘காதல் ஹார்மோன்’ என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள்தான் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது என்பது நமக்கு ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்த விஷயம்தான்.
அப்படியிருக்க ஆக்ஸிடோஸினால் ஆட்கொள்ளப்படுகின்ற மூளையின் உயிரணுத் தொகுதியை எலிகளில் செயலிழக்கச் செய்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, ஒரு ஆண் எலிக்கு ஒரு கட்டையைப் பார்ப்பதும் கூடத் தயாராகவுள்ள ஒரு பெண் எலியைப் பார்ப்பதும் ஒன்றாக இருந்திருக்கிறது.
அதாவது இவ்விரண்டைப் பார்க்கும்போதும் அதன் மூளையில் ஏற்படும் உணர்வு ஒரே மாதிரியாக இருந்திருந்தது என விஞ்ஞானிகள் செல் என்ற அறிவியல் சஞ்சிகையில் தெரிவித்துள்ளனர்.
ஆண்களுக்கு மட்டும்தான் என்றில்லை, பெண் எலிகள் துணை தேடும் பருவத்திலும், இந்த நியூரான்களைக் கட்டுப்படுத்திவிட்டால் அவை பாலுறவில் நாட்டம் கொள்வதே இல்லையாம்.
ஆக இந்த நியூரான்களை கட்டுப்படுத்திவிட்டால், அல்லது ஆக்ஸிடோஸின் சுரப்பதை கட்டுப்படுத்திவிட்டால், காமம் காலியாகிவிடும் எனத் தெரிகிறது.
இந்த ஆய்வின் முடிவுகள் சிறப்பம்சம் வாய்ந்தவை ஏனென்றால், மிகக் குறைந்த அளவில் இருக்கும் இந்த நியூரான்களுக்கு இத்தனை வல்லமை இருப்பது இப்போதுதான் விளங்குகிறது என இந்த ஆய்வில் பங்காற்றிய நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் நதானியல் ஹெய்ன்ஸ் கூறுகிறார்.
மூளையின் மேற்பரப்பில் முன்பகுதியில் ப்ரிஃப்ரண்டல் கார்ட்டெக்ஸ் என்று சொல்லப்படும் இடத்தில் ஆக்ஸிடோஸின் வயப்படும் இந்த நியூரான்கள் அமைந்திருக்கின்றன.
ஒருவரது குணாதிசயம், நமது கற்கும் ஆற்றல், நமது சமூக நடத்தை போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதி இது.
அதேபோல ஒரு பெண் பிள்ளை பெற்றவுடன் தான் பெற்ற பிள்ளை மீது அவருக்கு ஏற்ப்படும் பாசத்துக்கும் பிணைப்புக்கும் பின்னால் இருப்பதும் ஆக்ஸிடோஸின் ஹார்மோன்கள்தான்.
நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் பாலமாக ஆக்ஸிடோஸின்கள் செயல்படுவதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment