பெரிய ஸ்டார்களின் படக் கதைகள் பூசலில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அப்படி ‘கத்தி’யைத் தொடர்ந்து ‘லிங்கா’வின் கதைப் பிரச்சினையும் மதுரை ஹைகோர்ட்டில் இருக்கிறது.
‘லிங்கா’வின் கதை அணைக்கட்டு சம்பந்தப்பட்டது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதனைக் கட்டிய ‘பென்னி குயிக்’ வரலாற்றை மூலமாக வைத்து ‘முல்லை வனம் 999′ என்ற படத்தை இயக்கி வரும் மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ‘ரவிரத்தினம்’ என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், ‘லிங்கா’ கதை என்னுடைய கதையைத் திருடி படமாக்கப்பட்டது. எனவே ‘லிங்கா’ படத்தை வெளியிடத் தடை விதித்து, படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிகை எடுக்க வேண்டும் என்று மனுச் செய்திருந்தார்.
அதன்படி ‘லிங்கா’ இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருக்கும், ரஜினிகாந்துக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டதில், இருவரும் தனித்தனியே பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
“லிங்கா’ படத்தின் கதை திருடப்படவில்லை. இதன் கதையை பொன்.குமரன் எழுத, திரைக்கதையை நான் எழுதி இயக்கியிருக்கிறேன். எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்…”என்று கே.எஸ்.ரவிகுமார் தரப்பிலும், “லிங்கா’ படத்தின் கதை, திரைக்கதையை பொன்.குமரன் எழுதியிருக்கிறார். படத்தில் நடித்ததைத் தவிர எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்…” என்று ரஜினிகாந்த் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
திரைக்கதையை தான் எழுதியதாக கே.எஸ்.ரவிகுமாரும், அதே திரைக்கதையை பொன்.குமரன் எழுதியதாக ரஜினியும் சொல்லியிருக்க, இந்த இரண்டு பதில் மனுக்களிலும் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ரவிரத்தினம் இன்னொரு மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி எம்.வேணுகோபால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், “உண்மை அறியும் குழு மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரவிரத்தினம் சார்பிலும், ‘லிங்கா’ கதை முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர் தன் கதையைப் பதிவு செய்யவில்லை. எனவே அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தரப்பிலும் வாதிடப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்.
ரஜினி பிறந்தநாளான ‘டிசம்பர் 12’ம் தேதி ‘லிங்கா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்க, இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய எதிர்பார்ப்பும் பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
...........................................................................................................
0 comments:
Post a Comment