தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் 'கலைப்புலி' எஸ்.தாணு வெற்றி பெற்றார். செயலாளர்களாக டி.சிவா, ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தின் 2015 -2017-ம் ஆண்டுகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடந்த இந்த தேர்தலில் 770 பேர் வாக்களித்தனர்.
டி.ராஜேந்தர், சூர்யா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, நாசர், அமீர், ராதிகா, ஆர்.பி.சௌத்ரி உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
தயாரிப்பாளார் சங்கத் தலைவர் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தாணு மொத்தம் 565 வாக்குகளைப் பெற்றார். ஏ.எல்.அழகப்பன் 127 வாக்குகளையும், மன்சூர் அலிகான் 29 வாக்குகளையும் பெற்றனர்.
400 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் 'கலைப்புலி' எஸ். தாணு வெற்றி பெற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆகியிருக்கிறார்.
2 செயலாளர் பதவிகளுக்கு டி.சிவா மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் இருவரும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர வேறு யாரும் களத்தில் இல்லாததால், இருவரும் போட்டியின்றி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாளர் பதவிக்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் போட்டியிட்டனர். தியாகராஜன் 621 வாக்குகளைப் பெற்றார். வெங்கடேஷ் 128 வாக்குகளைப் பெற்றார். இதனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் சத்தியஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் பொருளாளராக வெற்றி பெற்றார்..
2 துணைத் தலைவர் பதவிகளுக்கு கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இதில் கதிரேசன் 484 வாக்குகளையும், தேனப்பன் 355 வாக்குகளையும் பெற்று துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment