↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்கள்தான் கதைத் தளம். ஆறு மாதங்கள் வேலை மீதி ஆறு மாதங்கள் ஊரைச் சுற்றுவது என்கிற ஜாலி பாலிசியுடன் திரிகிறார்கள் ஹீரோ ஆரோன் மற்றும் அவரது நண்பர் சாக்ரடிஸ். அப்படியொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக ஊரைவிட்டு ஓடும் காதல் ஜோடியை அவர்கள் சந்திக்க நேர்கிறது. உண்மை நிலை தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்யப்போய், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். அங்கே அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவர்களும் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து அவர்களைப் பற்றிய தகவல்களை பெற கட்டி வைத்து நையப்புடைக்கிறது அந்த சாதி வெறிப்பிடித்த கும்பல். தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்தக் கும்பல் நம்ப மறுக்கிறது. அவ்விருவரிடமும் உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.அதுவரை தனக்கு காதல் வரும்படி எந்தப்பெண்ணையும் பார்க்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது. பெண்ணைக் காணாமல் வெறியில் திரியும் அந்தக் கும்பலின் முன்பாகவே கயலை காதலிப்பதாக சொல்கிறான் ஆரோன். ஏற்கனவே கொலைவெறியில் இருப்பவர்களுக்கு இது இன்னும் ஆத்திரமூட்ட, அவனை கொலை செய்யும் முடிவுக்கு வருகிறார்கள். அக்கட்டத்தில் ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.

இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்ன ஆரோன் மீது கயலுக்கு காதல் அரும்புகிறது. காதல் வலியால் துடிப்பவளை ஆசுவாசப்படுத்தி காதலனை தேடிச்செல்லுமாறு அவளது பாட்டி யோசனை சொல்ல, காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல்.கயல் தன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் பிறகு தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத்தேட,காதல்கோட்டை பார்ட்-2 போல நீள்கிறது தேடும்படலம். இறுதியில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கயல் படத்தின் முடிவு.முந்தைய இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் சுபமான முடிவு அமையவேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது .

ஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. மைனா சித்தார்த்-அமலாபாலை ஞாபகப்படுத்துகிறார்கள். இருவரில் கயல் மட்டுமே நம் கண்களில் நிறைகிறார். துரு துரு கண்கள், வெள்ளந்திப் பார்வை, திருஷ்டியாய் உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம், மாநிறம் தோற்றம் என்று ஒரு கிராமத்து தேவதையை அச்சு வார்த்தது போல் இருக்கிறார். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் செமையாக ஸ்கோர் செய்கிறார். ஹீரோவின் நண்பரா.. கூப்பிடுங்கடா சூரியை என்கிற சமகால சினிமா ட்ரெண்டுக்கு இயக்குனர் செல்லாதது ஆறுதல். ஆனால் இதில் சாக்ரடிசாக வரும் நண்பர் காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு அவ்வப்போது பேசும் வசனம் புரியவும் இல்லை, புரிந்த சில இடங்களில் சிரிப்பும் வரவில்லை. இயக்குனரின் ஆஸ்தான காமெடியன் தம்பி ராமையா இல்லாத குறை நன்றாகத் தெரிகிறது.

இந்தப் படத்தில் பெருங்குறையாக நிறைய கேரக்டர்கள் பேசும் வசனங்கள் தெளிவாக இல்லை. கல்யாண வீட்டில் சித்தப்பாவாக வரும் அந்தப் பெரிசு செய்யும் ரவுசு ஓரளவு புன்னகைக்க வைத்தாலும் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவே சிறிது நேரமெடுக்கிறது. ஆர்த்தியும் அவரது மாணவிகளும் தங்கியிருக்கும் லாட்ஜ் ரூம்பாய், ஆர்த்தியை சார் என்று அழைக்கிறார். அதைக் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். சார் என்கிற வார்த்தையைத் தவிர அவர் பேசுவது எதுவுமே புரியவில்லை.அது நகைச்சுவைக்காக சேர்க்கப் பட்ட காட்சி என்றால் பேசுவது புரிந்தால் தானே சிரிக்க முடியும்...?வில்லனாக வரும் யோகி தேவராஜ் முதல் போலிஸ், லாரி டிரைவர், கயல் பாட்டி என்று படத்தில் நிறையப் பேர் காதலில் phd முடித்தது போல் லெக்சர் எடுப்பது ஏனோ எரிச்சலைத் தருகிறது. வெளி உலகமே தெரியாத ஒரு இளம்பெண்ணை இப்படித்தான் ஒரு பாட்டி காதலனைத் தேடிப்போ என அனுப்பி விடுவாரா..?

ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். சீரியசான ஒரு விசயத்திற்காக போன்  செய்யும் போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அதைவிடக் கொடுமை அந்தப் போலீஸ்காரர்களிடம் ஆரோனும் சாக்ரடிசும் கக்கும் தத்துவார்த்த சிந்தனைகள். நறுக்கென்று நான்கு டயலாக்கில் முடித்திருக்கலாமே..ஆரோன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதன் பின்னணியை அவனது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங். அதேப்போல் ஆரோனும் சாக்ரடிசும் ஒருவர் பெயரை மற்றொருவருக்கு இனிஷியலாக வைத்துக் கொள்வது 'நண்பேண்டா.. ' வுக்கு புது விளக்கம்.

படத்தில் முக்கிய பலம் என்று கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமாரி வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக பெரிய சபாஷ் போடலாம். தசாவதாரம் படத்தில் சொதப்பிய சுனாமி காட்சிகளை இதில் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார்கள். சுனாமியின் பின்னணிக்காக  டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மிரட்டலாக இருக்கிறது.அதெல்லாம் சரி, இந்த சுனாமி காட்சி எதற்காக வைக்கப்பட்டது..? மனிதன் உருவாக்கிக் கொண்ட செயற்கை சீரழிவான சாதியால் பிரித்து வைக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியை இயற்கை பேரழிவான சுனாமி சேர்த்து வைக்கிறது  என்பதற்காகவா..? அப்படியானால் சுனாமிக்கு முன்பாகவே அவர்கள் சேர்வதாக ஏன் காண்பிக்க வேண்டும்..?

குளோசப் ஷாட்களில் கண்களும் வாயும் தெரிந்தால் போதும் என்பது பிரபு சாலமன் உத்தியா.? அப்படியானால்  சத்தம் வாயிலிருந்து வருவதால் வாயை மட்டும் காண்பித்திருக்கலாமே. சில  குளோசப் கட்சிகள் பயமுறுத்துகிறதய்யா.. ஒரு மென்மையான காதலை முரட்டுத்தனமாக சொல்லும் பிரபு சாலமனின் அதே டெம்பிளேட் கதைதான். ஆனால் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை. முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றுகிறது.சுனாமியை தத்ரூபமாக காட்டிய விதத்திற்காகவும், கயல்விழி ஆனந்திக்காகவும் வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top