↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஒரு நாள் பேட்டாவுக்காக கங்காரு படத்தின் ஷூட்டிங்கை ஒரு லைட்மேன் நிறுத்தினார். இது என்ன கொடுமை.. இதற்கு விடிவுகாலம் என்ன? என குமுறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அமைதிப்படை 2 படத்துக்குப் பிறகு, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் கங்காரு. 

மிருகம், உயிர், சிந்து சமவெளி படங்களை இயக்கிய சாமி இயக்கியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்கேவி தியேட்டரில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்தப் படத்துக்காக தான் பட்ட பாடுகளைச் சொன்னார்.

அவர் பேசுகையில், "இந்தக் கங்காருவை ரொம்ப நாள் சுமந்திருந்தேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. 

ஒரு கசப்பான அனுபவம், இதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்க வில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்..? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ, செல்வமணியா விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார். எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப் படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளைக் கட்டுப் படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?,'' என்று குமுறினார்.

தயாரிப்பாளர்களுக்கு திமிர் இருக்கவேண்டும்! 
சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் பேசினார். அவர் கூறுகையில், "இது மாதிரி முன்பும் நடந்துள்ளன.'திருமதி பழனிச்சாமி' படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி.அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம் அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் சொன்னார்.. 'டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல' என்றார். 'உனக்காக நடித்தவன் அவன். குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ' என்றேன்.

ஒரு முறை இளையராஜா ஏழு பாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் 7 பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும் தன் படத்தில் நாலு சீக் வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல் போதும் என்று கேட்டார்கள். அவர் கொடுக்க மறுத்தார். இசையமைப்பாள​ருக்கே இவ்வளவு திமிர் இருந்தால் எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.. அப்படி என்ன பாட்டு என்று நினைத்து போய் கேட்டேன்.. நானே அந்த ஏழையும் வாங்கினேன். பயன்படுத்தினேன். அந்தப் படம்தான் 'வைதேகி காத்திருந்தாள்'. இதுதான் வித்தை திமிர். தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும். தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால், ஒற்றுமை இல்லா விட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். காப்பாற்ற முடியாது," என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top