↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பெங்களூரு சர்ச் சாலையில் இன்று இரவு குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெங்களூர் நகரில் மகாத்மா காந்தி சாலை- பிரிகேட் சாலைக்கு அருகே உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் இன்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் பவானி. இவர் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரிய வந்துள்ளது.

தலையில் படுகாயத்துடன் பவானி மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் கடுமையான தலைக்காயம் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 37. காயமடைந்த கார்த்திக்கின் உறவினர்தான் பவானி. சம்பவத்தின்போது பவானி, கார்த்திக் (21), கார்த்திக்கின் சகோதரி பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் குழந்தைகள் சகிதம் அருகே இருந்த அமீபா என்ற விளையாட்டு கிளப்புக்கு சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து பிரியா கூறுகையில், கோக்கோநட் குரோவ் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது. அதில் பவானியும், கார்த்திக்கும் காயமடைந்தனர்.


எனது அத்தை ஒரு பக்கமாக தூக்கி வீசப்பட்டார். எனது சகோதரருக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் எனது அத்தைக்குத்தான் ரத்தப் போக்கு அதிகமாக இருந்தது. ஆட்டோவில் அவரை தூக்கிக் கொண்டு போனபோது ஆட்டோவில் ரத்தம் நிறைய வெளியேறி விட்டது. வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர். அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.



சதானந்த கவுடா ஆய்வு 

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மத்திய அமைச்சர் சதனாந்த கவுடா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ராஜ்நாத்சிங் ஆலோசனை 
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இருவரிடம் தீவிர விசாரணை 
இதனிடையே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இருவரை பெங்களூர் போலீசார் தடுத்து வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் உஷார் நிலை 
பெங்களூர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து முக்கிய நகரங்களிலும் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் காவல்துறையினரை அறிவுறுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது. புத்தாண்டு நெருங்குவதால் தனி நபர்களும், தீவிரவாத குழுக்களும் மக்களைக் குறி வைத்துத் தாக்கக் கூடும் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அதிக ரத்தம் வெளியேறியதால் பவானி மரணம் 

சென்னைப் பெண் பவானி மரணமடைந்தது குறித்து மல்லையா மருத்துவமனை டாக்டர் காஞ்சன் கூறுகையில், பவானிக்கு அதிக அளவிலான ரத்தம் வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் அவரைக் காக்க கடுமையாக போராடினோம். ஆனால் முடியவில்லை.

விடுமுறைக்காக பெங்களூர் வந்த பவானி 
பவானி விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் பெங்களூர் வந்திருந்தார். சர்ச் சாலையில் உள்ள எம்பயர் ஹோட்டலில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தபோது இ்த விபரீதம் நேர்ந்து விட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top