கேரள திரைப்பட நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன்(72) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயம், சிறுநீரக செயலிழப்பும், நுரையீரல் சம்பந்தமான நோயும் இருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
அவருடைய உடல்நிலையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டாலும், புதன்கிழமை காலை 6.27 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாலா என்ற சிறிய கிராமத்தில் பிறந்த மாலா அரவிந்தன், சிறிய நாடகக் குழுவில் தபேலா இசைக் கலைஞராக பணியாற்றி வந்தார்.
பின்னர், நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அவரது நடிப்புத் திறமையைக் கண்ட நாடக இயக்குநர்கள், அவரை நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தனர்.
இதையடுத்து, 1970களின் தொடக்கத்தில் கேரள திரையுலகில் அறிமுகமான மாலா அரவிந்தன், 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அரவிந்தனுக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
0 comments:
Post a Comment