↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலக கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக நாக்-அவுட் போட்டியொன்றில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று புது வரலாறு படைத்துள்ளது. நடப்பு உலக கோப்பையில் லீக் சுற்றுகளில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் தோற்ற தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, யு.ஏ.இ போன்ற நாடுகளுக்கு எதிராக இமாலய வெற்றிகளை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஏ பிரிவில் இடம் பிடித்த இலங்கையும், நியூசிலாந்து மற்றும், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் மட்டும் தோல்வியடைந்து, பிற நாடுகளுடன் அபாரமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை நடுவேயான காலிறுதி நாக்-அவுட் போட்டி சிட்னி மைதானத்தில், இன்று நடைபெற்றது. .


தென் ஆப்பிரிக்காவிடம் எல்லா உலக கோப்பைகளிலும் கண்டுவந்த ஒரு பிரச்சினை என்னவென்றால், ஆரம்பத்தில் அசத்திவிட்டு, நடுவில் கோட்டைவிடுவதுதான். தென் ஆப்பிரிக்கா 1991ல் உலக கிரிக்கெட் அரங்கத்தில் பிரவேசிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டது. 1992 உலக கோப்பை தொடங்கி கடந்த 2011 உலக கோப்பை வரை, நாக் அவுட் சுற்றில்தான், நாக்கு தள்ளி மூர்ச்சையாகி விழுந்து வருகிறது தென் ஆப்பிரிக்கா.

1992 உலக கோப்பையில், காலிறுதி நாக்அவுட் சுற்றாக இல்லை. எனவே அதை தாண்டி, நாக்-அவுட் சுற்றான அரை இறுதிக்கு வந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், மழை காரணமாக மாற்றப்பட்ட விதிகளின் படி 1 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சுத்த அபத்தமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருஷ்டத்தை நொந்தபடி தோற்று வெளியேறியது தென் ஆப்பிரிக்கா.


1999 உலக கோப்பையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ஆலன் டொனால்டின் தேவையில்லாத ஓட்டத்தால், ஆட்டம் டையில் முடிந்தது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை கணக்கிட்டு அந்த அணியே பைனலுக்கு சென்றது. தென் ஆப்பிரிக்காவின் மிக சோகமான தோல்வியாக அது பதிவானது.

சொந்த மண்ணில் நடந்த 2003 உலக கோப்பையில், மழை காரணமாக ஆட்ட விதி மாற்றப்பட்ட போட்டியில், விதியை சரியாக கணிக்காமல் ஆடி தோற்றது தென் ஆப்பிரிக்கா.

2011ல் காலிறுதி போட்டியின்போது நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென் ஆப்பிரிக்கா. இதுபோல முக்கிய தருணங்களில் காலை வாரி விடுவது தென் ஆப்பிரிக்காவின் வாடிக்கை. ஒவ்வொரு முறையும், கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்படுவதும், ஆனால் நடுக்கத்தின் காரணமாக முக்கிய போட்டிகளில் தோற்பதும் தென் ஆப்பிரிக்காவுக்கு கை வந்த கலை.

ஆனால், இந்த உலக கோப்பையில்தான் முதல் முறையாக நாக்-அவுட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு புது வரலாறாகும். இதன்மூலம், தென் ஆப்பிரிக்காவை குறைத்து மதிப்பிட்டுவிட கூடாது என்ற அச்சம் பிற அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top