கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தை வாங்கியதால் பாதிப்படைந்ததாக விநியோகஸ்தர்கள் ‘மெகா பிச்சை’ப் போராட்டத்தை அறிவித்திருப்பது படவுலகில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு அந்தப் பதற்றத்தைத் தணிக்க முயன்று வருகிறது.
என்றாலும், இன்று தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துள்ள பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அறிக்கை ஒன்றை மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளனர். அதில் தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க, சில விநியோகஸ்தர்களிடம் பேசியதில் இருந்து, ‘லிங்கா’ பிரச்சினைக்குப் பின்னர், பெரிய படங்களின் விநியோக முறையில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அதாவது, ‘லிங்கா’ வரை சொன்ன விலைக்கு படத்தை வாங்கிக்கொண்டு லாப, நஷ்டங்களை உடன்பாட்டில் எழுதிக்கொள்ளாத நிலையை மாற்றி, எந்தப் பெரிய நடிகரின் படமாக இருந்தாலும், சொன்ன விலைக்கு வாங்கிக்கொள்வது, ஆனால், நஷ்டம் ஏற்பட்டால் ஏற்பட்ட நஷ்டத்தைத் திரும்ப தயாரிப்பாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்வது என்பதை உடன்பாடாகவே எழுதிக்கொள்கிறார்களாம்.
இந்த உடன்படிக்கையால் அவர்கள் நஷ்ட ஈட்டுக்காகக் கோர்ட்டுக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது. அந்த முறையில் உடன்பாடு செய்துகொண்ட பெரிய நடிகரின் படமொன்றும் இப்போது விநியோகஸ்தர்களின் பாதிப்பு லிஸ்டில் அடுத்து இருப்பதாகத் தெரிகிறது.
ஆக, ‘லிங்கா’ பிரச்சினையைத் தொடர்ந்து, எல்லா பெரிய தலைகளின் படங்களுக்கும் இனி சிக்கல் ஏற்பட்டிருப்பது உண்மை..!
0 comments:
Post a Comment