தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்திய வழக்கில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை கோர்ட், தூக்கு தண்டனை விதித்து, சமீபத்தில் உத்தரவிட்டது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் குடும்பத்தினர், தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. தூக்கு தண்டனையை எதிர்த்து கடந்த 10ம் தேதி இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ., தலைவர் சுப்ரமணியன்சாமி, தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு மாற்ற இலங்கை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியிருந்தார். பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மீனவர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனால் விரைவில் மீனவர்கள் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் எனவும் செய்திகள் வெளியாகின. தமிழக மீனவர்கள் அப்பீல் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு அதிபர் ராஜபக்சே பொது மன்னிப்பு வழங்கிட வாய்ப்பு உள்ளதாக இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் கூறியிருந்தார். இதனால், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து மனு தாக்கல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பீல் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரி கொழும்பு ஐகோர்ட்டில் மீனவர்கள் சார்பில் வக்கீல் அனில்சில்வா நேற்று மாலை மனுத்தாக்கல் செய்தார். மனுவை கொழும்பு ஐகோர்ட் பரிசீலித்து அப்பீலுக்கான அனுமதியை பின்னர் அறிவிக்கும், என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால், அவர்கள் இந்தியா அனுப்பப்படுவார்கள் என இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் ரீதியான நடவடிக்கை காரணமாக மீனவர்களை இந்தியா அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை காரணமாக மீனவர்களின் உறவினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment