அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்ற இலங்கை அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இலங்கை அணி தோல்வியடைந்த நிலையை பார்த்தால் உலகக்கிண்ணத்தில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என்று தெரிந்தது. ஆனால் எழுச்சி பெற்ற இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துத் தள்ளியது.
துடுப்பாட்டத்தில் வலுவான நிலையை அமைத்துக் கொண்டு இமாலய இலக்கையை எளிதாக எட்டிப் பிடித்தது. இந்த வலுவான துடுப்பாட்ட வரிசை எப்போதும் கைகொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணியால் வலுவான அணிகளையும் வீழ்த்த முடியும்.
அந்த அணியில் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருக்கும் அதேவேளையில் பந்துவீச்சு சரியாக அமையவில்லை. பந்து வீச்சாளர்கள் இஷ்டத்திற்கு ஓட்டங்களை எதிரணிக்கு வாரி வழங்குகின்றனர். இது இலங்கை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை துடுப்பாட்ட வரிசை, மிரட்டும் பந்துவீச்சு என இரண்டும் வலுவாக இருக்கிறது. இந்த அணி லீக் ஆட்டத்தில் 2 போட்டிகளில் எதிர்பாராத தோல்வியை தழுவியது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ், மில்லரின் ஓட்ட முறையிலான விக்கெட்டுகள் ஆட்டத்தின் முடிவை அப்படியே மாற்றிவிட்டன. இதனால் இந்தியா 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா 400 ஓட்டங்களை கூட எளிதாக குவிக்க கூடியது. மேற்கிந்திய தீவுகளை துவைத்தெடுத்தது கூட நினைவிருக்கலாம். அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சில வியூகங்களை இலங்கை அணி செய்யும் பட்சத்தில் எளிதாக அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.
உலகக்கிண்ணத் தொடரில் பலம் வாய்ந்த இவ்விரு அணிகளின் மோதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment