லிங்கா படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாக படம் வெளியான ஏழாவது நாளில் இருந்தே குரல் கொடுத்து வரும் விநியோகஸ்தர்கள், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலன் தலைமையில் சந்தித்த அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது-
லிங்கா படத்தை வாங்கி ரிலீஸ் செய்த விஷயத்தில் எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் பதினேழு கோடியை நாங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு தந்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஆனால் ரஜினிகாந்த் சம்பளமில்லாமல் 45 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்ட லிங்காவை ஈராஸ் நிறுவனத்திற்கு 157 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள். அவர்களது லாபத்தில் ஒரு பகுதியைதான் எங்கள் நஷ்ட ஈடாக கேட்கிறோம். திருப்பூர் சுப்ரமணியன் மூலமாக இந்த பிரச்சனையை தீர்க்க முன் வந்தார் ரஜினிகாந்த். நாங்களும் கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைத்தோம். தற்போது படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த 33 கோடில பத்து சதவீதத்தை மட்டும் நஷ்ட ஈடாக தர முன் வந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
வெறும் மூன்றரை கோடி நஷ்ட ஈட்டை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் எங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்களிடம் பிரச்சனையை விளக்கி ‘மெகா பிச்சை‘ என்ற பெயரில் கையேந்த இருக்கிறோம். இந்த போராட்டம் போயஸ் கார்டனிலிருக்கும் ரஜினி வீட்டில் துவங்கும். தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போடவுள்ளார் என்று கூறினார் சிங்காரவேலன்.
முன்னதாக நிருபர்கள் கேட்ட காரசாரமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சிங்காரவேலன், ‘கண்டவங்களும் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது. உங்க பத்திரிகை பேரை சொல்லிட்டு கேள்வி கேளுங்க’ என்று கூற, அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ‘உங்களை தூண்டிவிடுகிறவர்கள் யார்?’ என்ற கேள்விக்கு ‘யாரும் எங்களை தூண்டிவிடவில்லை. நாங்கள் ரஜினியை நம்பி படம் வாங்கி தெருவுக்கு வந்துவிட்டோம். அதனால் போராடுகிறோம்’ என்றார் சிங்காரவேலன்.
சிங்காரவேலன் தரப்பில் அங்கு வந்திருந்த சிலரிடம் நைசாக பேச்சுக் கொடுத்தபோது, இந்த மெகா பிச்சை போராட்டத்தில் முதல் பிச்சையை போட சம்மதித்திருப்பர் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் என்று கூறப்பட்டது.
பணமே வராவிட்டாலும், ரஜினியை கேவலப்படுத்தியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. நடக்கட்டும்….
0 comments:
Post a Comment