↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பலாத்கார குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த வங்கதேச பவுலர் ருபேல் ஹொசைன், இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, அசத்தினார். உலக கோப்பை ஏ பிரிவின், முக்கியமான இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றது வங்கதேசம். பட்லரின் அதிரடியால், ஒரு கட்டத்தில், இங்கிலாந்து வெற்றி பெறும் சூழல் உருவானது.

ஆனால் அந்த விக்கெட் வீழ்ந்த பிறகும், வோக்ஸ், வங்கதேசத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கினார். அவருக்கு ஸ்டூவர்ட் பிராட் கம்பெனி கொடுத்து, வெற்றியின் அருகே இங்கிலாந்தை அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில்தான், 49வது ஓவரை வீச வந்தார், ருபேல் ஹொசைன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடை கிளீன் பௌல்ட் ஆக்கி வெளியேற்றினார் ருபல். கடைசி விக்கெட்டாக களமிறங்கினார் ஆன்டர்சன். ஓவரின் 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அரங்கமெங்கும் டென்ஷன். ஓவரின் 3வது பந்தில் ஆன்டர்சனை கிளீன் பௌல்ட் ஆக்கினார் ருபேல். அவ்வளவுதான், இங்கிலாந்தின் ஆட்டம் குளோஸ்.

கடைசி இரு விக்கெட்டுகளும், ஏனோ..தானோ பந்து வீச்சில் விழவில்லை. மிகவும் லாவகமாக ஸ்விங் செய்யப்பட்ட பந்துகள் அவை. இத்தனைக்கும், அதற்கு முந்தைய ஓவரில்தான் ஸ்டூவர் பிராட் சிக்சர் பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில்தான், டென்ஷன் ஆகாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ருபேல் ஹொசைன். முன்னதாக, பெல் மற்றும், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் ருபேல் வீழ்த்தி, 4 விக்கெட்டுகளை தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். ஆனால் ருபேல் ஹொசைன், பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று வந்து இவ்வளவு கூலாக விளையாடினார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.

19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top