ஆங்… இந்த போட்டோவுக்கு நடுவிலிருப்பவர்தான் அந்த ஆர்ட் டைரக்டர் ராம்கி ராமகிருஷ்ணன்! கமரகட்டு படத்தின் இயக்குனர். ஒரு காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியவர் அதற்கப்புறம் மெல்ல மெல்ல அவரிடமே உதவி இயக்குனராகவும் வேலை பார்த்தார். விஜய் நடித்த பல படங்களுக்கு இவர் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியும் இருக்கிறார். அதற்கப்புறம் நடுவில் சில படங்களை இயக்கியிருந்தாலும் இப்போது அவர் இயக்கியிருக்கும் இந்த கமரகட்டு பட்ஜெட்டிலும் ஹெவி. பரபரப்பிலும் ஹெவி. ஏன்?
இந்த படத்தின் தயாரிப்பாளர் சந்திரமோகன் பார்த்திபன் இயக்கி சமீபத்தில் வெளிவந்த கதை திரைக்கதை இயக்கம் படத்தின் தயாரிப்பாளர். அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபம்தான் மேலும் ஒரு படத்தை எடுக்க தூண்டியிருக்கிறது அவரை. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழா நடைபெறுவதற்கு முன், இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணியை அழைத்த சந்திரமோகன், வறுமையில் இருக்கிற இயக்குனர்களின் குழந்தைகளுடைய படிப்பு செலவுக்காக மூன்று லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கிவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருந்தார். ஆனால் அதை மேடையில் சொல்லி பெருமை பீற்றிக் கொள்ளாததே அவரது பெருமைகளில் ஒன்றாக இருந்தது.
கோலிசோடா படத்தில் நடித்த ஸ்ரீராம், மற்றும் சாட்டை யுவன் இருவரையும் ஹீரோவாக வைத்து, அவர்களுக்கு ஜோடியாக ரக்ஷா ராஜ், மணிஷாஜித் ஆகிய இருவரையும் சேர்த்து ஒரே அமர்க்களம் பண்ணியிருக்கிறார் ராம்கி ராமகிருஷ்ணன். ஸ்கூல் யூனிபார்ம் சகிதம் அவர்கள் பாடும் டூயட், எந்தெந்த ஸ்கூலில் வயிற்றெரிச்சலாக முடியப்போகிறதோ?
ராம்கி ராமகிருஷ்ணன் பேசும்போதுதான் அந்த விஷயத்தை சொன்னார். ‘நான் இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என்று பல வேலைகள் பார்த்துருக்கேன். அதுக்கு காரணமே டி.ராஜேந்தர் சார்தான். அவரால மட்டும் எப்படி முடியுதுன்னு நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன். அவரை மாதிரி வரணும்னு நினைச்சு நினைச்சு தொழில் கத்துக்கிட்டதாலதான் என்னால அவரை மாதிரியே அவ்வளவு வேலைகளையும் இழுத்து போட்டுகிட்டு செய்ய முடிஞ்சுது’ என்றார்.
உலகமே டி.ராஜேந்தரின் பெருமை தெரியாமல் கேலியாக பார்த்து கெக்கேபிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கும் போது, ராம்கி ராமகிருஷ்ணன் அவரை எங்கேயோ கொண்டு போய் வச்சுட்டாரே!
0 comments:
Post a Comment