மும்பையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் இழிவான வார்த்தைகளால் உரையாடியதாக, சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை தொடர்ந்து நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில், இந்திப்பட இயக்குனர் கரண் ஜோகர், நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே, தேசிய ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ஜெயந்திலால் ஷா உள்பட 14 பேர் மீது மும்பை தார்டுதேவ் போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், புனே போலிஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே, தன் மீது போலிஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தபோது வாதாடிய தீபிகாவின் வழக்கறிஞர், இந்த வழக்கிற்கும், நடிகை தீபிகா படுகோனேக்கும் சம்பந்தம் இல்லை. அவர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை போலவே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசவில்லை.
ஆகையால் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதிகள், தீபிகா படுகோனேவை கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவோ வருகிற 16ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment