↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

குட்டி அணிகளை வைத்துக் கொண்டு அடித்து, துவைத்து பெரிய அணிகள் அடுத்தடுத்து சாதனை பட்டியலில் இடம்பெறுவதையெல்லாம் பார்க்கும்போது பல ரசிகர்கள் கண்களில் ரத்தக் கண்ணீரே வடிகிறது. இதுபோன்ற குட்டி அணிகளும், பெரிய அணிகளும் மோதும் போட்டியால், காலம், சக்தி என அனைத்தும் வீணாவதுடன், உலக கோப்பை குறித்த டென்ஷன் குறைந்துவிடுகிறது.

உலக கோப்பையில் கடந்த இரு நாட்களில் மட்டும் இரு அணிகள் 400 ரன்களை கடந்துள்ளன. அயர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 411 ரன்கள் குவித்ததென்றால், நான் மட்டும் இளக்காரமா என்ற தோரணையில், ஆப்கனுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்களை குவித்துள்ளது.

இப்படித்தான் இந்தியாடமும், 2007ல் ஒரு குட்டி நாடான பெர்முடா வந்து சிக்கியது. பிரித்து மேய்ந்து விட்டார்கள் இந்தியா பேட்ஸ்மேன்கள். குவித்தது 413 ரன்கள். இத்தனைக்கும் அந்த தொடரில், இந்தியா படுதோல்வியுடன் அடுத்த சுற்றுக்கு போக முடியாமல் வெளியேறியது. ஆனால் சாதனை என்னவோ இந்தியாடயதுதான்.


1996ல் கென்யாவுக்கு எதிராக இலங்கை 398 ரன்களை குவித்து தலை சுற்ற வைத்தது. ஏனெனில், டி20 கிரிக்கெட் பற்றிய அறிமுகம் இல்லாத அந்த காலகட்டத்தில் 300 என்பதே மிகப் பெரிய ரன். 250 ரன்களுக்கு மேல் எடுத்தாலே முக்கால்வாசி நேரம் அந்த அணிதான் வெற்றிபெறும்.

அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டிகளில் அனைத்திலுமே குட்டி அணிகள்தான் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்றன என்பதை புள்ளி விவரத்தை எடுத்து படித்தால் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படி புள்ளப் பூச்சிகளை கூட்டி வந்து, தலையில் மிளகாய் அரைப்பதற்கு பதிலாக, பெரிய அணிகளே மோதிக்கொள்வதுதானே உலக கோப்பைக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.

டெஸ்ட் விளையாட தகுதி பெற்ற அணிகளை மட்டுமே உலக கோப்பையில் விளையாட அனுமதிப்பதே குட்டி அணிகளுக்கு செய்யும் உபகாரமாகவும் இருக்க முடியும்.


ஆனால் இந்த நேரத்தில், டெண்டுல்கர் கூறியுள்ள கருத்துதான் கிலி ஏற்படுத்துகிறது. இப்போதுள்ள 14 அணிகளே போதாது என்கிறார் சச்சின். 25 அணிகளையாவது அழைத்து வந்து உலக கோப்பையில் ஆடவிட வேண்டுமாம். சச்சின் ஒரு விளையாட்டு வீரர் என்ற கோணத்தில் யோசித்து இதை கூறியிருக்கலாம். ஆனால் பார்வையாளர்கள் கோணத்தில் யோசித்தால், 25 அணிகள் விளையாடுவதை பார்ப்பதற்கு, சிசிஎல் கிரிக்கெட்டில் விக்ராந்த் விளையாடுவதை பார்ப்பதே தேவலை என்ற எண்ணம் வருவதை மறுக்க முடியாது.

இந்த நேரத்தில்தான், ஐசிசியின் ஒரு அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. 2019 உலக கோப்பையில், 10 அணிகள்தான் பங்குபெறுமாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top