ஆர்யாவுடன் ‘மதராச பட்டினம்’, விக்ரமுடன் ‘தாண்டவம்’, ‘ஐ’ படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன், இப்போது உதயநிதி ஜோடியாக நடிக்கிறார். தமிழில் பேசினால் ஓரளவு புரிகிறது. பதிலளிக்க வெளிநாட்டு ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார். செம ஜாலி டைப். ஃப்ரெண்ட்லியாகப் பேசுகிறார். யார் கற்றுக் கொடுத்தது என்று தெரியவில்லை, ஆண்களைப் பார்த்தாலே ‘அண்ணா’ என்று சொல்கிறார். அதுபற்றி கேட்டால் சிரிக்கிறார். இனி எமியுடன்...
“ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தில் நான் நடித்தபோது, அந்த ஷூட்டிங்கில் தமிழ் கற்றுக் கொள்ள நேரமும், அதற்கான அவசியமும் இருந்தது. இப்போது நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இனியும் என்னால் ரசிகர்களையும், மீடியாவையும் ஏமாற்ற முடியாது. விரைவில் தமிழில் சரளமாகப் பேசவும், படிக்கவும் கற்றுக்கொள்வேன். அதற்காக டியூஷன் மாஸ்டர் ஒருவரை நியமிக்கும் ஐடியா இருக்கிறது.
என்னதான் நான் வெளிநாட்டுப் பெண்ணாக இருந்தாலும், தமிழ்நாட்டில் புடவை கட்டிக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களைப் பார்த்தால் அப்படியே மெய்மறந்து போகிறேன். எனக்கும் புடவை கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறது. அதுவும் பட்டுப்புடவை என்றால் கொள்ளை ஆசை. இப்போது உதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். ஷூட்டிங் தொடங்கி விட்டது. இதில் மடிசார் கட்டிக்கொண்டு நடிக்கப் போகிறேன். ஒரு பெண்ணுக்கு மற்ற உடைகளை விட, புடவை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னை நேரில் பார்ப்பவர்கள், மாடர்ன் கேரக்டர்களுக்கு மட்டுமே நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய கணிப்பை ஒவ்வொரு படத்திலும் பொய்யாக்க வேண்டும் என்று துடிக்கிறேன். காரணம், ஒரு நடிகை என்றால் அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். ஒவ்வொரு கேரக்டரிலும் தன் நடிப்புத் திறமையை நிரூபித்து, தனி முத்திரை பதிக்க வேண்டும். ‘மதராச பட்டினம்’, ‘தாண்டவம்’, ‘ஐ’ ஆகிய படங்களில் என் நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனால்தான் இவ்வளவு குறுகிய காலத்தி லேயே எனக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி இருக்கிறது.
இந்தியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ‘ஏக் தீவானா தா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அதில் திரிஷா நடித்திருந்த கேரக்டரில் நடித்தேன். அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நினைத்தேன். ஆனால், தெலுங்கில்தான் வந்தது. ‘எவடு’ படத்தில் நடித்தேன். இனி தமிழில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன்.
எதிர்காலத்தில் சென்னையில் குடியேறுவேன். உடனே, தமிழ்நாட்டு மருமகள் ஆவேனா என்று கேட்டு விடாதீர்கள். யாருடைய தலையில் என்ன எழுதியிருக்கிறது? எந்த நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறேன். இப்போது என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருக்கிறது. என் பழைய காதல் விவகாரத்தை மீண்டும் புதுப்பித்துப் பேச விரும்ப வில்லை. ஸோ, அது ஒரு கெட்ட கனவு. அதை நான் எப்போதோ மறந்து விட்டேன்.
சினிமாவில் என்னை நிலையான கதாநாயகியாக மாற்றிக்கொள்ள வேண்டும். காதல் ஹீரோயினாக மட்டுமல்ல, அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதற்கான உடலமைப்பும், நடிப்பும் என்னிடம் இருக்கிறது. யார் அதுபோல் ஒரு கதை கொண்டு வருகிறார்களோ, அந்தப் படத்துக்கு என் சம்பளத்தில் ஓரளவு தள்ளு படி உண்டு.
0 comments:
Post a Comment