சேர்ந்தே எடுத்த முடிவுதான் அது. தனித்தனியாக நடித்தால் இருவருக்குமே பெரிய சம்பளம் கிடைக்கும். சேர்ந்து நடித்தால், ஒருவர் சம்பளத்தையே இருவருக்கும் பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை! (சினிமாவுல மட்டும்தான்) என்ற முடிவுக்கு ரஜினியும் கமலும் சேர்ந்தே வந்திருந்தார்கள். அதற்கப்புறம் இந்த இமயமலைகளின் இடுப்பு சங்கிலியை அறுக்கும் திட்டத்தோடு வந்த பல தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் சொன்ன பதில் ‘நோ.. நோ! ’
காலமும் ஞாலமும் உருண்டு கொண்டேயிருக்கிறது. இப்போது இருவருக்குமே தனித்தனியாக கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் ரெடி. ஆனால் கதை வேண்டுமே? இந்த நிலையில்தான் இந்தியில் வெளிவந்து சக்கை போடு போட்ட பி.கே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது ஜெமினி லேப் நிறுவனம். இதில் கமலை நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் பேசினார்களாம். கதையில் சில பல திருத்தங்களை சொன்ன கமல், அதற்கு உடன்பட்டால் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். இயக்கப்போவது யாராக்கும்? மூன்று முக்கிய இயக்குனர்களிடம் பேசியிருக்கிறார்கள். மூவருமே இந்த படத்தை இயக்க தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை முடிவு செய்ய வேண்டியது கமலும் ஜெமினியும்தான்.
இந்த நிலையில்தான் பி.கே படத்தில் சஞ்சய் தத் நடித்த வேடத்தில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு வார்த்தையை துவங்கியிருக்கிறது ஜெமினி. இந்தி கதையில் சஞ்சய்தத் இறந்துவிடுவார். தமிழில் ரஜினியை நடிக்கக் கூட வைத்துவிட முடியும். ஆனால் அவர் இறப்பதை போல காண்பித்தால், அவரது ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்களே? மண்டையை பிய்த்துக் கொண்டு திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறது ஜெமினி.
விரைவில் ரஜினி கமல் ரசிகர்கள் கொண்டாடுவது போல ஒரு செய்தி வெளிவரலாம்!
0 comments:
Post a Comment