↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம் அலுவலகத்திற்கு நேரில் போய், தங்கள் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான் அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி. அதன் மீது கடந்த பல்லாண்டுகளாகவே ஆசை கொண்டிருந்த விஜய்க்கு குமுதம் வழங்கியிருக்கக் கூடிய இந்த பெருமை நியாயமானதுதானா? அடுக்குமா? நீதியா? என்றெல்லாம் நாடு முழுக்க கேள்விகள் எழுந்தாலும், இந்த பெருமையை குமுதம் அறிவித்திருக்கிறதே… அதுதான் கிரேட்!
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனின் அலுவலக அறையில் ஒரு பத்திரிகை கட்டிங் மட்டும் லேமினேஷன் செய்து மாட்டப்பட்டிருக்கும். (இப்போதும் அது சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது) அது வேறு எதுவுமல்ல, விஜய்யின் முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திற்கு குமுதம் எழுதிய விமர்சனம்தான் அது. அந்தளவுக்கு விஜய்யை பாராட்டி எழுதியிருப்பாங்களோ…? அதனால்தான் அதை ஜெராக்ஸ் எடுத்து பிரேம் பண்ணி மாட்டியிருக்கிறார் போலும் என்று தற்போதைய தலைமுறை நினைத்தால், அதுதான் இல்லை. அந்த விமர்சனத்தில் விஜய்யின் முகத்தை இவ்வாறு வர்ணித்திருந்தார்கள். ‘தேவாங்கு மாதிரியிருக்கிறார் ’ என்று!
அந்த தேவாங்குக்குதான் இன்று சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது குமுதம். காலம் மாறியிருக்கிறது. குமுதமும் மாறியிருக்கிறது. விஜய்யும் மாறியிருக்கிறார் என்பதன் அடையாளமின்றி இது வேறொன்றுமில்லை. மிக சாதாரணமாக விஜய் இந்த பட்டத்தையும், கடந்த கால சம்பவத்தையும் கடந்து போனாலும், நாளைய தீர்ப்பு படம் எடுக்கும் போதே ரசிகர்களின் ‘நாளைய தீர்ப்பு’ வேறு மாதிரியாக இருக்கும் என்று நினைத்தவர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி மட்டும்தான்!
தாஜ்மஹாலின் முதல் செங்கல் எது என்பது கட்டியவருக்கு மட்டுமே தெரியும். அப்படிதான் விஜய்க்கான முதல் கைதட்டலை காதால் அனுபவித்து புத்தியால் உருவாக்கியவர் எஸ்.ஏ.சி. ரஜினியின் புகழும், சினிமா செல்வாக்கும், அவருக்கான ரசிகர்களும், கலெக்ஷன் கல்லாவும் அப்படியே இருக்கும் போதே, என் பிள்ளையின் இடம் அதை நோக்கிதான் என்று கிளம்பிய எஸ்.ஏ.சி.க்குதான் இந்த பிறந்தநாளை விஜய் அர்ப்பணிக்க வேண்டும். (ஆனால் அந்த நாற்காலியை ரஜினியே விட்டுக் கொடுத்தால்தான் உண்டு. அது வேறு விஷயம்)
ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா? இந்த பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிக்கும் ரசிகர்கள், விஜய் படத்தை மட்டுமே போஸ்டரில் அச்சிட வேண்டும். எஸ்.ஏ.சி யின் படத்தை அச்சிடக் கூடாது என்றொரு ரகசிய உத்தரவு போனதாம் எல்லா ரசிகர் மன்றங்களுக்கும். இந்த உத்தரவுக்கு பின்னாலும் ஏதேனும் திட்டங்கள் இருக்கக் கூடும். அல்லது எதுவுமே இல்லாமல் நிஜத்தில் வேறொன்று நடந்திருக்கக் கூடும். எதுவாக இருந்தாலும், விஜய்யை சுற்றி நடக்கிற விஷயங்களை கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம்.
காரணம் அரசியல்!
ஏதாவதொரு பிரபலமான பத்திரிகை, ‘இந்த மூஞ்சுக்கெல்லாம் முதல்வர் ஆசையா ?’ என்று எழுதினால் அதையும் ஜெராக்ஸ் எடுக்கக் காத்திருப்பார் எஸ்.ஏ.சி. குமுதமே அதை செய்தால் இன்னும் மகிழ்வார்! வசதி எப்படி…?
-ஆர்.எஸ்.அந்தணன்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top