தமிழ் சினிமாவில் தன்னை கவனிக்க வைக்கிறார் சந்தோஷ் நாராயணன் என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஜனவரி 6-ல் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் லைவ் சாட் மூலம் ரசிகர்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தார்.
பிரபல இசைக் கலைஞரான சலீம் மெர்சண்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளராய்ப் பங்கேற்றார். அவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் லைவ் ஸ்ட்ரீமில் ரசிகர்களின் கேள்விகளைக் கேட்க, அவரும் வழக்கமான தனது அமைதியான புன்னகையுடன் பதில்களைக் கூறினார்.
ரசிகர்களின் உற்சாகமான கேள்விகளால் ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பக்கம் நிரம்பி வழிந்தது. அதில் சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் இதோ...
உங்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் இடையேயான இசை மாயம் இன்னும் எப்படி புதிதாகவே இருக்கிறது?
மணி சார் என்னுடைய நண்பர், வழிகாட்டி... அவருடன் வேலை பார்க்கும்போது வீட்டில் இருப்பது போலவே உணர்கிறேன். அங்கே எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதுவே காரணமாய் இருக்கலாம்.
உங்களுக்கு இணைய உலகம் பிடித்திருக்கிறதா?
கண்டிப்பாக. எல்லா விஷயங்களுக்கும் உடனுக்குடனே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது.
உங்களுக்குப் பிடித்த இளம் இசையமைப்பாளர்கள் யார்?
தமிழ் சினிமாவில் சந்தோஷ் நாராயணன் கவனிக்க வைக்கிறார்.
திரையில் உங்களை எப்போது ஹீரோவாகப் பார்க்க ஆசை. எப்போது இது நடக்கும்?
கண்டிப்பாக வாய்ப்பில்லை. இசை எனக்குக் கிடைத்த பரிசு. இந்த விஷயத்தில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனக்கு இசையே போதும். கதை எழுதும் பணியைத் தொடங்கி இருக்கிறேன். தயாரிப்பிலும் ஆர்வம் இருக்கிறது. இதுவே போதும்.
இசையைத் தேர்வுசெய்வதில் இயக்குநரின் முடிவு உங்களைப் பாதித்திருக்கிறதா?
சில நேரங்களில் இயக்குநர்களின் தேர்வு மனதுக்கு அத்தனை நெருக்கமாக இருக்காது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வேன். அதுவே மிகப் பெரிய வெற்றிப்பாடலாக அமைந்துவிடும். ‘முன்பே வா அன்பே வா’ அதற்கு நல்ல உதாரணம்.
உங்களின் ஹாலிவுட் இசை முயற்சி எப்படி இருக்கிறது?
இன்னமும் எனக்கான இடத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அங்கேயுள்ள சிலருக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது. இங்கு போல் இல்லாமல் 12 பேரைக் கொண்ட குழுதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.
ஏன் இரவு நேரங்களிலேயே உங்களின் பெரும்பாலான வேலைகளைச் செய்கிறீர்கள்?
என்னுடையது 9 டூ 5 வேலை கிடையாது. இரவு பகல் என்று எதுவும் இல்லை. அதற்கான ஓட்டத்திலேயே போய் வேலையை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
இளம் இசையமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மனிதர்கள்தான் நாம் என்ன செய்கிறோம் என்பது எல்லோராலும் கவனிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். இயற்கையைப் பாருங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பூத்துக் குலுங்குகிறது. அதைப்போல் தான் இருக்க வேண்டும். முதலில் நம்முடைய சொந்த திருப்திக்காக உழைக்க வேண்டும். சமுத்திரத்தில் ஒரு துளியாக இருக்காதீர்கள். ஒற்றைச் சொட்டின் சமுத்திரமாக இருங்கள். உங்கள் இசை முதலில் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, நீங்கள் அதை வாங்குவீர்களா என யோசியுங்கள்.
உங்கள் வேலை பற்றி?
தரம், விலை, வேகம் இந்த மூன்றில் இரண்டைத்தான் தரமுடியும். மூன்று விஷயங்களையும் தர முயற்சிக்கிறேன்.
ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என சலீம் கேட்க, அதற்குத் தனது பக்கத்தை இரவு 12 மணிக்கு பார்க்கச் சொல்லி அங்கு ஆச்சரியம் காத்திருப்பதாகக் கூறினார் ரஹ்மான். 12 மணிக்கு, தன்னுடைய புதிய இசை பேண்ட் 'NAFS'-க்கான முன்னோட்டத்தைப் பகிர்ந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பேண்ட் இந்தியர்களின் இசைத் திறமையை உலக அளவில் பரப்புவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment