↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ராஜபக்சேவை மிக மிக சிறப்பாக திட்டமிட்டு அவரது வழியிலேயே போய் கவிழ்த்து காலி செய்துள்ளனர் இலங்கை எதிர்க்கட்சியினர். இதுதொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை கொழும்பில் உள்ள ஒரு இந்திய அதிகாரி தட்ஸ்தமிழுக்குத் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெல்வதை விட ராஜபக்சேவை ஏமாற்றித் தப்பிப்பதே சிறிசேன மற்றும் அவரது ஆதரவு கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருந்ததாம். ஆனால் வெற்றிகரமாக அதைச் செய்து வெற்றியையும் பறித்து ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் எதிர்க்கட்சிகள்.

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை யாருமே ராஜபக்சே இப்படி வீழ்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜபக்சே கும்பலின் சர்வாதிகார போக்கு மக்களின் மனநிலையை மாற்றிப் போட்டிருந்ததே அவரது பெரும் வீழ்ச்சிக்குக் காரணமாகி விட்டது. இந்த எதிர்ப்பலையை சரியாக உணர்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைந்து எதிர்க்கட்சிகள் செயல்பட்டதால்தான் வெற்றி சாத்தியமானது. 

மேலும் ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருந்தவரான சிறிசேனவையே வேட்பாளராக ஆக்கியதும் இந்த சாதனைக்கு ஒரு முக்கியக் காரணமாகும். இலங்கை அதிபர் தேர்தலை இந்திய அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். தேர்தலுக்கு முன்பு நடந்தவை குறித்து ஒரு அதிகாரி தட்ஸ்தமிழுக்கு விளக்கியுள்ளார். அதில், எப்படி எதிர்க்கட்சிகள், ராஜபக்சேவின் கழுக்கண்களிலிருந்து தப்பி பிழைத்தனர் என்பதைக் கூறுகிறார் அவர்.

அவர் பாணியிலேயே போய் 
ராஜபக்சே எப்போதுமே, தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்ததில்லையாம். ஒரு கட்டத்தில் தனக்கு எதிராக மக்கள் மனது இருப்பதை உணர்ந்து கொண்ட அவர் தான் தோற்பது உறுதி என்ற முடிவுக்கும் வந்து விட்டார். 

ஆனால் தோல்வியை தவிர்க்க எதிர்க்கட்சிகளை முடக்கிப் போட கடைசி வரை முயற்சித்தார். இதற்காக எதிர்க்கட்சியினரையும், அவர்களது உத்திகளையும் முறியடிக்க ஒரு குழுவையும் நியமித்தார். எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், உத்திகள், சந்திப்புகளை உளவு பார்த்து தகவல் சொல்லி அதை முறியடிப்பது இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையாகும். 24 மணி நேரமும் இந்த குழுவினர் அயராமல் வேலை பார்த்தனர். 

எதிர்க்கட்சியினர் என்ன செய்கிறார்கள் என்பதை இவர்கள் ராஜபக்சேவுக்குப் போட்டுக் கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் தான் நினைப்பது போலவே எல்லாம் நடந்து வருவதாக தெம்பாக உணர்ந்தார் ராஜபக்சே. ஆனால் லெப்ட்டில் சிக்னல் போட்டு விட்டு ரைட்டில் வளையும் ஆட்டோக்கள் போல எதிர்க்கட்சியினர் ராஜபக்சேவுக்கு கடுக்காய் கொடுத்து விட்டு ரகசியமாக பல திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வந்தனர்.

போன் கிடையாது.. எஸ்.எம்.எஸ். கூட கிடையாது 
தங்களது போன்களை ராஜபக்சே நிச்சயம் ஒட்டுக் கேட்பார் என்பதால் சிறிசேன உள்பட எந்தத் தலைவரும் தங்களுக்குள் போனில் பேசிக் கொள்ளவில்லை. ஏன் ஒரு எஸ்எம்எஸ் கூட அனுப்புவதில்லை. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே இதுதொடர்பாக ஒரு ரகசியக் கூட்டம் போட்டு இதுகுறித்து முடிவெடுத்து விட்டனர். அன்று முதல் யாரும் போனில் பேசிக் கொள்வதில்லை, பொது இடத்தில் சந்திப்பதில்லை, எஸ்எம்எஸ் அனுப்புவதில்லை. 

அதேசமயம், ஸ்கைப்பை மட்டும் பயன்படுத்திப் பேசி வந்துள்ளனர். இதை கண்டுபிடிக்க ராஜபக்சே குழுவினர் தவறி விட்டனர். இதனால் எதிர்க்கட்சியினரின் வியூகம், உத்திகள் குறித்து அவருக்குத் தெரியாமல் போய் விட்டது.

என்னமோ நடக்குது போலயே 
ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் என்னமோ ரகசியமாக நடப்பாதக ஒரு கட்டத்தில் உணர்ந்தார் ராஜபக்சே. ஆனால் போனை ஒட்டுக் கேட்டபோது ஒரு தகவலும் அவரது குழுவினருக்குக் கிடைக்கவில்லை. இதனால் பெரும் குழப்பமடைந்தார் ராஜபக்சே. ஒரு கட்டத்தில் விரக்தி அதிகமாகி தனது தம்பி பசிலை, சிறிசேனவிடம் அனுப்பியும் வைத்து பேசச் சொன்னார். தன்னைச் சந்தித்த பசிலிடம், நான் உங்கள் பக்கம்தான் இருக்கிறேன். கவலை வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தாராம் சிறிசேன. அதை ராஜபக்சேவும் நம்பி விட்டார்.

நம்பிக்கை பொய்த்தது 
ஆனால் சிறிசேனவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தபோது அதிர்ந்து போய் விட்டார் ராஜபக்சே. இதனால் ராணுவத்தை விட்டு நாட்டை கையகப்படுத்தவும் அவர் திட்டமிட்டார். ஆனால் ராணுவம் அதற்கு ஒத்துழைக்கவில்லையாம். இதனால் தனது தோல்வி உறுதி என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். ராணுவத் தளபதிகளுடன் ராஜபக்சே ஆலோசனை நடத்தியதால் எதிர்க்கட்சிகள் பீதியடைந்தன. 

ஆனால் ராணுவம், ராஜபக்சே சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை என்று தெரிய வந்ததும் அவர்கள் நிம்மதியடைந்தனர். கடைசி வரையிலும் பல்வேறு சதிகளையும், தந்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தார் ராஜபக்சே. ஆனால் எதுவுமே பலிக்கவில்லை. யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை. 

மேலும் சிறிசேனவுக்கு தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஆதரவு அதிகமாகி விட்டது. இதனால்தான் ராணுவமும், காவல்துறையும் ராஜபக்சே பேச்சைக் கேட்க மறுத்து விட்டனவாம். கடைசியில் தனது தோல்வி கன்பர்ம்ட் என்ற முடிவுக்கு வந்து அமைதியாகி விட்டார் ராஜபக்சே.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top