‘ஐ’ படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் விக்ரம். அந்த உற்சாகத் துடன் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் வேலைகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘ஐ’ படத்துக்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தப் படத்துக்காக மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தோம். சீனா. புவனேஷ்வர், ஜெய்ப்பூர், தாய்லாந்து, பெங்களூர், புனே, சென்னை, பொள்ளாச்சி என்று ஒவ்வொரு இடமாகச் சுற்றிவந்து படமாக்கினோம். அந்த உழைப்புக்கு இப்போது பலன் கிடைச்சிருக்கு.
இந்தப் படத்தை சீனாவில் படம்பிடித்த அனுபவம் எப்படி இருந்தது?
சீனாவில் சண்டைக் காட்சிகளை வேகமாச் செய்யறாங்க. நாம மெதுவா பண்றோம். அவர்கள் மரபு ரீதியாவே வேகமாக இருக்காங்க. சண்டைக் காட்சிகளில் வெறுமனே அடிக்காம, குதிச்சு கழுத்துல உட்கார்ந்து பல்டி அடிச்சு அவன் எந்திரிச்சு வர்றதுக்குள்ள இன்னொருத்தனை அடிச்சு தூள் கிளப்பறாங்க. அது பெரிய விஷயம். சீனாவுல இருந்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.
பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் ‘மீரா’ படத்தில் நடிச்சீங்க. இப்போ அவர் ஒளிப்பதிவு செய்த ‘ஐ’ படத்தில் நடிச்சிருக்கீங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பி.சி ஸ்ரீராம் என் மானசீக குரு. அவர் இயக்கத்தில் ‘மீரா’ படத்துல நடிச்சதைப் பெருமையா நினைக்கிறேன். தமிழ் சினிமாவில், தேசிய அளவில் அவர் புரட்சி செய்திருக்கிறார். புது யுக்தியைப் பயன்படுத்தி இருக்கிறார்.
தென்னிந்தியாவில் இருக்கும் முக்கியமான 10 ஒளிப்பதிவாளர்களை வரிசைப்படுத்தினால் அதில் 8 பேர் இவரோட உதவியாளர்களாத்தான் இருப்பாங்க. பி.சி ஸ்ரீராம் ஒரு பல்கலைக்கழகம். ஒவ்வொரு ஷாட்டையும் அவர் கஷ்டப்பட்டு செய்வார். அவரிடம் வேலை செய்வதே புத்துணர்ச்சியைத் தரும்.
இனி ‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ மாதிரி கமர்ஷியல் சினிமா பக்கம் வரமாட்டீங்களா?
‘10 எண்றதுக்குள்ள’ கமர்ஷியலான படம்தான். அதுவும் திருட்டுத்தனமான கமர்ஷியல் படம்.
‘10 எண்றதுக்குள்ள’ எப்படி வந்திருக்கு?
விஜய் மில்டனோட ‘கோலிசோடா’ படம் பார்த்து நான் பிரமிச்சுப் போயிட்டேன். ரசிகர்கள் அந்த அளவு படத்தைக் கொண்டாடியதற்கான அர்த்தம் அந்தப் படத்தைப் பார்த்ததும் புரிஞ்சது. விஜய் மில்டனை போனில் அழைத்துப் பாராட்டினேன். அப்போ அவர், ‘உங்களுக்கு என்கிட்ட கதை இருக்கு’ன்னு சொன்னார். நேரில் வரவழைச்சு கதையைக் கேட்டேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. நடிக்கச் சம்மதிச்சேன். தமிழ் சினிமா வேற மாதிரி மாறிட்டு இருக்கு. அதுல ‘10 எண்றதுக்குள்ள’ முக்கியமான படமா இருக்கும். இது ஒரு த்ரில்லர் கதை. கதையைச் சொன்னால் படம் பார்க்கிற சுவாரஸ்யம் போய்விடும். கமர்ஷிய லும், யதார்த்தமும் கலந்த கலவைதான் இந்தப் படம்.
இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சியையும், கிளைமேக்ஸ் காட்சியையும் எடுத்தால் படம் முடிந்துவிடும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும். நிச்சயம் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். இதை அடுத்து, மீண்டும் விஜய் மில்டனுடன் இணைய பேசிக்கிட்டு இருக்கோம்.
ஹீரோவாக நடிக்க ஆரம்பிச்சு 25 வருஷம் ஆகுது. ‘ஐ’ உங்கள் 50வது படம். இதைக்கொண்டாட வேணாமா?
இது வெறும் எண்தான். கொண்டாட எதுவும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தப் படம் மாதிரி நெறைய படங்கள் பண்ண ஆர்வமா இருக்கேன். அதை நான் விரும்புறேன். எனக்கு தீனி போடும் படங்கள் தேவை. 17 மணிநேரம்கூட தொடர்ந்து நடிக்க எனக்கு பிடிச்சிருக்கு. என் படங்கள்ல, என்கிட்டே இருந்தே நான் வித்தியாசம் காட்டணும். யாரும் பண்ணாத அளவுக்கு நான் தனியா தெரியணும். அர்த்தமுள்ள படங்களில் நான் இருக்கணும். அதுதான் என் ஆசை.
சினிமா உலகில் உங்கள் வெற்றியை யாருக்கு அர்ப்பணிக்க விரும்புறீங்க?
என் அப்பாவுக்கு. அவர் சினிமாவுல சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சார். ஒரு ஹீரோவாகி அவர் ஆசையை நான் நிறைவேத்திட்டேன். என்னோட வெற்றிகளை என் அப்பாவுக்கு அர்ப்பணிக்குறதுல எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி.
உங்க மகன் துருவ் நடிக்க வருவதாக செய்திகள் வந்ததே?
இல்லை. ஃபேஸ்புக்ல யாரோ துருவ் போட்டோவை திருடிப் போட்டுட்டாங்க. அவனுக்கு ஃபோட்டோகிராபி, சினிமான்னா ரொம்பப் பிடிக்கும். நிஜமாவே என் மகன் நடிக்க வர்றார்னா நானே பெரிய அளவில் விழா மாதிரி எடுத்து அறிமுகப்படுத்துவேன்.
0 comments:
Post a Comment