↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் போட்டியில் கூட அட்டகாசமாக ஆடுகிறார்கள் நமது நடிகர்கள். ஆனால் பிரிஸ்பேனில் இன்று பேட் செய்த நமது வீரர்கள் மோசமாக ஆடி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டனர். ஆஸ்திரேலியாவிடம்தான் நாம் அடி வாங்கினோம் என்றால் இங்கிலாந்திடம் அதை விட மோசமாக அடி வாங்கியிருப்பது ரசிகர்களுக்கு "டபுள்" ஏமாற்றமாக அமைந்துள்ளது.
முதலில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர்ந்து அடி வாங்கியது. ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. பாதியில் கேப்டன் டோணியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். 2 போட்டிகளை டிரா செய்தார்கள் என்பதுதான் அந்தத் தொடரில் நமக்குக் கிடைத்த பெரிய ஆறுதல்.
முரளி விஜய், விராத் கோஹ்லி போன்றோர் சிறப்பாக ஆடிய போதிலும் ஒரு அணியாக இந்தியா வெற்றி பெறத் தவறியது. ஆஸ்திரேலியாவிடம் இருந்த வெற்றி வெறி, நமது அணியிடம் இருந்தது போலவே தெரியவில்லை. இப்போது முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் இந்தியா மோசமாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனார்கள். பேட்டிங்கில் ரோஹித் சர்மா ஜொலித்தார். சுரேஷ் ரெய்னா பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஆடினார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.
பின்னர் பந்து வீச்சில் இந்தியா வழக்கம் போல சொதப்பியது. ஆஸ்திரேலியர்களை அதிரடியாக முடக்கிப் போடக் கூடிய பந்து வீச்சை நமது பந்து வீச்சாளர்கள் கடைசி வரை காட்டவே இல்லை. அவர்களை நன்றாக அடிக்க விட்டு விட்டனர். ஆணித்தரமான பந்து வீச்சு என்று ஒரு பவுலர் கூட போடாதது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றியது. ரன்களை அள்ளி அள்ளிக் கொடுத்தனரே தவிர விக்கெட்களை சாய்ப்பதில் கஞ்சத்தனமாகவே இருந்தனர். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இ்நதியா தோல்வியைத் தழுவியது.
இன்று இங்கிலாந்திடமும் இந்தியா மோசமான முறையில் ஆடியுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால் ஆடத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. யாருமே சரிவர ஆடவில்லை. ஒரு பார்ட்னர்ஷிப் கூட உருப்படியாக அமையவில்லை.
முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் சொதப்பினார் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். ரஹானே சற்று ஆடிப் பார்த்தார். முடக்கி விட்டனர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். விராத் கோஹ்லி இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். சுரேஷ் ரெய்னா இந்த முறை ஒரு ரன்னோடு கிளம்பிப் போனார். கேப்டன் டோணி சற்று நிலைத்து நின்று ஆடிப் பார்த்தார். ஆனால் அவரையும் ஏறக்கட்டி விட்டனர். ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சற்று நிதானமாக ஆடி 44 ரன்களை எடுத்தது மட்டுமே இன்றைய இந்திய ஆட்டத்தில் சொல்லிக் கொள்ளும்படியான ஒன்றாக இருந்தது. கடைசியில் 39.3 ஓவர்களிலேயே இந்தியா ஆல் அவுட் ஆனது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளி விட்டுள்ளது.
50 ஓவர்கள் கூட நம்மால் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருக்கலாம், இங்கிலாந்து பந்து வீச்சு சிறப்பானதுதான். ஆனால் உலகிலேயே மிகச் சிறந்த பேட்டிங் வீரர்களைக் கொண்ட இந்தியாவால் 50 ஓவர்களைக் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போனது நிச்சயம் கேவலமான ஒன்றுதான். நம்மிடம் பந்து வீச்சு மகா மோசமாக உள்ளது. எனவே ரன் குவித்தால்தான் சற்றேனும் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
ஆனால் நமது பேட்ஸ்மேன்கள் இதை உணர்ந்து ஆடியது போலவே தெரியவில்லை. வந்தார்கள், போனார்கள். என்னதான் ஆச்சு இந்தியாவுக்கு என்று தெரியாமல் ரசிகர்கள்தான் பாவம் சாப்பிடக் கூடப் போகாமல் புலம்பியபடி போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment