ஹரியானாவில் சர்ச்சை சாமியார் ராம்பாலை நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்ய விடாமல் அவரது ஆயுதம் தாங்கிய குண்டர்படை துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியே போர்க்களமாக மாறிவிட்டது. ஹரியானாவின் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பால் மீது 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு முதல் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்துக்குள்ளே ராம்பாலின் சீடர்கள் அணிவகுப்பு நடத்தி நீதிபதிகளை மிரட்டினர். இது தொடர்பாக பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ராம்பால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ராம்பால் ஆஜராக உத்தரவிட்டு 2 முறை நீதிமன்ற பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ராம்பாலை கைது செய்ய முடியாத அளவுக்கு அவரது சீடர்கள் போலீசாருடன் மோதினர். இதனால் கோபமடைந்த உயர்நீதிமன்றம் நேற்று மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்தது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் ராம்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியாகவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று முதல் ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவப் படையினர், ரிசர்வ் போலீஸ் படையினர் பர்வாலா ஆசிரமம் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசாரை உள்ளே செல்ல விடாமல் பல ஆயிரக்கணக்கான ராம்பால் சீடர்கள் கோட்டை போல் இருக்கும் ஆசிரமத்தின் சுவர்கள் மீது ஏறி நின்று கொண்டு கொலைவெறித் தாக்குதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டியது. மதில் மீது ஏறி நின்ற ராம்பால் சீடர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் .அத்துடன் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக போலீசாரும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் பார்த்தனர். போலீசார் நடத்திய தடியடியில் பல பத்திரிகையாளர்கள் ரத்த காயங்களுக்கு உள்ளாகினர். தொடர்ந்தும் ஆசிரமத்துக்குள் போலீசாரால் உள்ளே நுழைய முடியவில்லை. ஆசிரமத்துக்குள் பல ஆயிரம் பேரை ராம்பால் திரட்டி வைத்திருப்பதால் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தால் பெரும் அசம்பாவிதம் நடைபெறக் கூடும் என்ற நிலை இருக்கிறது.
இதனிடையே ராம்பால் ஆசிரமத்தின் ஒருபகுதியை போலீசார் இடித்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அந்தப் பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏராளமான தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆசிரமத்தின் ஒருபகுதியை இடித்து உள்ளே நுழையவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசார். நிலைமை மோசமாகி இருப்பதால் காவல்துறை அதிகாரிகளுடன் மாநில முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். இதனிடையே ராம்பாலுக்கு உடல்நிலை சரியில்லை.. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று ஆசிரம செய்தித் தொடர்பாளர் ராஜ்கபூர் தெரிவித்துள்ளார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment