‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் பற்றி இயக்குநர் சமுத்திரகனி இந்த வாரத்திய ‘ஆனந்த விகடனில்’ பேட்டியளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், ”பாராட்டு வாங்கிறதைவிட மத்தவங்களைப் பாராட்டுறதில் அதிகம் சந்தோஷப்படுவார் கே.பி. சார். பாரதிராஜா சாரின் ’16 வயதினிலே’ படத்தைப் பார்த்துட்டு ‘என்னைவிட சின்ன வயசு. இல்லேன்னா பாரதிராஜா காலில் விழுந்திருவேன்’ என ஓப்பனாக ஒரு மேடையில் சொன்னவர்.
‘ஆட்டோகிராஃப்’ பார்த்துட்டு ‘இப்படி ஒரு ஸ்கிரிப்ட் நமக்குத் தோணாமப் போச்சேனு மனசுக்குள்ள வருத்தமா இருக்குடா. ரொம்ப நல்ல படம். சேரன் ஆபீஸுக்கு வண்டியை விடு. நாம நேர்ல போய்ப் பாராட்டுவோம்’னு கிளம்பிட்டார். ‘காதல்’ படம் பார்த்துட்டு பாலாஜி சக்திவேலைப் பாராட்டுறதுக்காக அவரோட ஆபீஸுக்கு காரை விடச் சொல்லிட்டார். இவர் அங்க வர்றது தெரிஞ்சு டைரக்டர் ஷங்கர் வந்தார். ‘நான் உன்னைப் பார்க்க வரலை. பாலாஜி சக்திவேலைப் பார்க்க வந்திருக்கேன்’னு சொல்லிட்டு பாலாஜி சக்திவேலைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.
சினிமா மேல் அவருக்கு இருந்த காதல் கடைசிவரை அப்படியே இருந்தது. ஆறு மாசங்களுக்கு முன்னாடி பார்த்தப்பகூட ‘ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கேன்… சரியா வருமா.. பாரு’ன்னு புதுப்பட இயக்குநர் மாதிரி ஆர்வமா கேட்டார். எந்த அளவுக்குப் பாராட்டுவாரோ, அந்த அளவுக்கு போட்டினு வந்துட்டா ஆர்வமா களத்துல இறங்கிருவார்.
‘சித்தி’ சீரியல் க்ளைமாக்ஸ் நெருங்கிட்டு இருந்த நேரம். தமிழ்நாடே பரபரப்பா இருக்கு. அப்பதான் அவரோட கதையில் நான் ‘அண்ணி’ இயக்குவதா கமிட் ஆனேன். கொஞ்ச நாள் ஷூட்டிங் போனதும், ‘இப்போ சேனல்ல கொடுத்து ‘அண்ணி’யை டெலிகாஸ்ட் பண்ணச் சொல்லு’னு சொன்னார். ‘சார்… ஊரே ‘சித்தி’ பத்தி பேசிட்டு இருக்கு. கொஞ்ச நாள் ஆகட்டுமே’ன்னு சொன்னேன். ‘ஒரு படைப்பாளி தன் படைப்பைப் பண்ணும்போதுதான் பயப்படணும். அப்புறம் தைரியமா சபையில் வெச்சிடணும். மக்கள் பார்த்துப்பாங்க’னு சொன்னார். பத்து எபிசோட் ‘அண்ணி’யை யாரும் கண்டுக்கலை. அப்புறம் எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. படைப்பாளிக்குன்னு ஒரு கம்பீரம், தைரியம் எப்பவும் இருக்கணும்கிறதை கே.பி சார்தான் உதாரணமா நின்னு எனக்குக் கத்துக் கொடுத்தார்…!” என்கிறார் சமுத்திரகனி.