முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா கடந்த ஆட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர். இதன் காரணமாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடன் திருகோணமலை அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி தொடக்கம் அவர் திருகோணமலை அரசாங்க அதிபராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் மேலிட அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, ரஞ்சித் சில்வாவிடம் அவரது பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கோரியிருந்தது.
எனவே வேறு வழியில்லாத நிலையில் தற்போது அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் பிரகாரம் நாளை முதல் ரஞ்சித் சில்வா பதவியிலிருந்து விடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மஹிந்த அரசின் காலத்தில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களை பதவியிலிருந்து விடுவித்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
வாக்குறுதியளித்திருந்த படி முதன் முதலில் வடக்கின் ஆளுநர் சந்திரசிறி வீட்டுக்கு அனுப்பப்பட்டு பளிஹக்கார எனும் சிவில் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கிழக்கில் ரஞ்சித் சில்வா வீட்டுக்கு அனுப்பப்படுகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் மத்தியில் நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்ள மைத்திரி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை புலனாகின்றது.
மேலும் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களுக்கு இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் வருகை தந்ததில்லை. அதனையும் மைத்திரி மாற்றி அமைக்கவுள்ளார். எதிர்வரும் 3ம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள மைத்திரி, தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்தமை குறித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக தமிழ், சிங்கள உறவு பலமான முறையில் கட்டியெழுப்பப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஜனாதிபதி மைத்திரியின் நோக்கமாக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment