சிறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் கோசியார்பூரை சேந்தவர் ஜஸ்வீர்சிங். இவரது மனைவி சோனியா.
அதே பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மா என்பவரின் மகன் ஹரிவர்மா. இவன் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஜஸ்வீர் சிங்-சோனியா இருவரும் ஹரிவர்மாவை காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவனது தந்தை ரவிவர்மா விடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவர் பணம் தரமறுத்ததால் ஈவு இரக்கமின்றி ஹரிவர்மாவை கொன்று வீசினர்.
இவ்வழக்கை விசாரித்த கோசியார்பூர் நீதிமன்றம் ஜஸ்வீர்சிங்- சோனியா அவர்களுக்கு உடந்தையாக இருந்த விக்ரம் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து 3 பேரும் தண்டனையை குறைக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சோனியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
ஜஸ்வீர் சிங்கின் தண்டனையை குறைக்க மறுத்து விட்டது. இருவரும் தற்போது பாட்டியாலா சிறையில் தனித்தனி பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்து பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தாம்பத்ய உரிமை வழக்கு தொடர்ந்தனர்.
அதில், எங்களுக்கு திருமணமாகி 8-வது மாதத்திலேயே கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளோம். நாங்கள் இறப்பதற்கு முன்பு சிறையிலேயே குழந்தை பெற விரும்புகிறோம்.
இதற்காக இருவரையும் பொது ஜெயிலுக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஐஸ்வீர்சிங்- சோனியாவின் இந்த கோரிக்கைக்கு கொலையுண்ட சிறுவனின் தந்தை ரவிவர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இருவரும் ஜெயிலில் குழந்தை பெற உயர்நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.
இருவரும் சேர்ந்து எனது மகனை கொன்று குடும்பத்தையே சீரழித்து விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை தேவைதானா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிட்டியை நியமித்தது.
இதனையடுத்து அந்த கமிட்டி விசாரணை மேற்கொண்டு கைதிகள் தாம்பத்ய உறவு கொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் தடையில்லை என்று பரிந்துரைத்தது.
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் பரபரப்பு தீர்ப்பினை அளித்தார். சிறையில் இருக்கும் தம்பதியர் தாம்பத்ய உறவு கொள்ளவதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் அவர்களின் அடிப்படை உரிமை என்று தெரிவித்த நீதிமன்றம், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள கணவனுடன் ஆயுள் தண்டனை பெற்றுள்ள மனைவி தாம்பத்ய உறவு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள தடையில்லை எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தது
- See more at: http://www.makkalinkural.lk/2015/01/blog-post_520.html#sthash.awOsGeqs.dpuf
0 comments:
Post a Comment