செந்தில் கவுண்டமணி காமெடியில் வருவது போல இங்கிலாந்தில் ரூ.100 கோடி காப்பீட்டுப் பணத்துக்காக, இறந்ததாக நாடகமாடிய இந்தியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்தியரான சஞ்சய் குமார், 2011 ஆம் ஆண்டு வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்ந்து சிக்கிச்சை பெறுவதாக லண்டனில் உள்ள தனது மனைவிக்கு அவர் ‘இமெயில்’ மூலம் தகவல் அனுப்பினார்.
பின்னர், அவர் மூளைக் காய்ச்சலால் இறந்து விட்டதாக சஞ்சய் குமாரின் இறப்புச் சான்றிதழ், இடுகாட்டு ரசீது ஆகியவற்றுடன் இங்கிலாந்தில் உள்ள காப்பீட்டு நிறுவனத்திடம் அவரது மனைவி முறையீடு செய்தார். அந்த நிறுவனத்தில் தனது கணவர் கட்டி வந்த பிரீமியத்துக்கான இழப்பீட்டு தொகையான 1 கோடியே 15 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகம்) வாரிசுதாரர் என்ற முறையில் தனக்கு வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காப்பீட்டு நிறுவனத்தின் புலனாய்வு பிரிவினர், சஞ்சய் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுவதும், இறந்ததாக குறிப்பிடப்பட்டதும் நாடகம் என்பதை அறிந்தனர். இந்நிலையில், வேறொரு பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு, மீண்டும் இங்கிலாந்துக்கு சென்ற சஞ்சய் குமாரை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அஞ்சுவையும் கைது செய்து இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தனது கணவரின் தொழில் நண்பர்கள், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்பி, அவரை பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, தொழிலில் ஏற்பட்ட இழப்புக்காக உரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்குமாறு துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும், அவரது உயிரை காப்பாற்றவே இந்த நாடகத்துக்கு துணை போனதாகவும் அஞ்சு கூறினார். அவரது இந்த வாதத்தைகளை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக இறந்ததாக நாடகமாடி மோசடி செய்த சஞ்சய் குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கு 5 மாதங்களும் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 comments:
Post a Comment