↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இலங்கை சுதந்திராக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என்று கூறி ஒருவர் தொடர்ந்த வழக்கில் ராஜபக்சேவை நேரில் ஆஜராகக் கூறி கொழும்பு மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முல்லெரியவா பிரதேச சபையின் தலைவர் பிரசன்னா சொலங்க அராச்சி. இவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டிருந்தார். அதில், மாகாண கவுன்சில் தலைவர் பிரசன்ன ரணதுங்காவின் வீட்டில் வைத்து, என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக இலங்கை சுதந்திரா கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்களிடம் வெற்றுத்தாள்களில் ராஜபக்சே கையொப்பம் வாங்கினார்.

முறைப்படி செயற்குழு கூட்டம் நடத்துவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால், அந்த கூட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரே நாளில் நடத்தப்பட்டது. தனது எதிர்ப்பாளர்களை புறக்கணித்து கட்சியின் தலைவராகிவிட ராஜபக்சே இந்த செயற்குழுவில் திட்டம் தீட்டினார். 

இதற்கு இடையூறாக இருந்த என்னை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கி விட்டார். இந்த நீக்கம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நால்வரும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

ஊழல் கமிஷனில் ஜேவிபி புகார் 
இதற்கிடையே, நாட்டின் பொது நிதியை ராஜபக்சே சகோதரர்கள் தவறாகப் பயன்படுத்தியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினர் இலங்கை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவை அளித்த பின்னர் ஜேவிபியின் எம்.பி. விஜிதா ஹேரத் கூறுகையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்களான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌சே, கோத்தபயா ராஜபக்சே, மகனும் எம்.பியுமான நமல் ராஜபக்சே, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என 12 பேர் மீது நாட்டின் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி முறைப்படி புகார் கொடுத்துள்ளோம். இவர்கள் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும், இது தொடர்பான விசாரணை முடியும் வரை இவர்களில் யாரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top