↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘லிங்கா’ பட விவகாரம் – சட்டப்படி சந்திப்போம் – தயாரிப்பாளர் வெங்கடேஷின் பதில்..!
‘லிங்கா ‘படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டும் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலையிடக் கோரி வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடந்த சில விநியோகஸ்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்த  ஒரு மணி நேரத்தில் வடபழனி ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், டி.சிவாவும்.
துவக்கத்தில் பேசிய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பு பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும், இரவு பகல் பாரமல், தூக்கமில்லாமல்.. வீட்டிற்குக் கூட செல்லாமல்… எத்தனை கஷ்டப்பட்டு, எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்புடன் அந்தப் படம் உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் மிக உருக்கமாக 25 நிமிடங்கள் எடுத்துரைத்தார். பின்புதான் மெயின் சப்ஜெக்ட்டுக்கே வந்தார்.
விநியோகஸ்தர் சிங்காரவேலனை பற்றி பேசுவதற்கு முன் டிசம்பர் 17-ம் தேதி சிங்காரவேலன் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியை ஒளிபரப்பச் செய்தார்.
பின்பு அவர் பேசும்போது, “இத்தனை கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தப் படம் பற்றி விநியோகஸ்தர் சிங்காரவேலன் முதன்முதலில் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சியாகிவிட்டேன். உடனேயே சிவா ஸார்கிட்ட போன்ல பேசி ‘என்ன ஸார் இப்படி?’ன்னு கேட்டேன். அவரும் உடனேயே ‘ஒண்ணும் இல்லை ஸார். நான் அவர்கிட்ட பேசிட்டேன். சரியாயிரும். நீங்க கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்குறேன்’னு சொன்னார்.
ஆனா அதுக்கப்புறமும் சிங்காரவேலன் மறுபடியும், மறுபடியும் இந்தப் பிரச்சினையை பேசுனது ரொம்பவே அதிர்ச்சியானது. ஏன்னா இப்போ நீங்களே கேட்டீங்கள்ல.. ‘லிங்கா’ படத்தை வாங்கின விநியோகஸ்தர்.. அதே படத்தைப் பத்தி வெளில தப்பா பேசலாமா..? அந்தப் படம் தோல்வி.. பெயிலியர்.. நஷ்டம்ன்னு நாலாவது நாளே பேசினால் அதுக்கப்புறம் கூட்டம் வருமா..?
கூடவே சொல்லியிருக்காரு. ‘டிசம்பர் 12-ம் தேதியை யார் செலக்ட் செஞ்சது..? கூட்டம் வருமா வராதான்னு கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்க வேண்டாமா?’ன்னு எங்களை கேட்டிருக்காரு. இந்தப் படத்தோட பூஜை அன்னிக்கே ‘இந்தப் படம் தலைவரோட பிறந்த நாள் அன்னிக்குத்தான் ரிலீஸ்’ன்னு சொல்லிட்டோம். எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே இவங்க ஏன் வந்து வாங்கினாங்க..? யார் இவங்களை வந்து வாங்கச் சொன்னாங்க..?
இப்படி தியேட்டர்ல ஓடிக்கிட்டிருந்த ஒரு படத்தை பத்தி அந்தப் படத்தோட விநியோகஸ்தரே நெகட்டிவ்வா கமெண்ட்ஸ் அடிச்சா, அது அந்தப் படத்தோட வசூலை பாதிக்கும்ன்றது அவருக்குத் தெரியாதா..? 
‘கொஞ்சம் பொறுங்க.. லீவு விட்டவுடனேயே திரும்பவும் கூட்டம் வந்திரும். அப்புறமா நாம பேசலாம்’னு சிவா ஸார் சொல்லியிருக்காரு. நாங்களும் அதையேதான் சொல்லச் சொன்னோம். ஆனா இவர் திரும்பத் திரும்ப மீடியாக்களிடம் பேட்டி கொடுத்து படத்தைக் குறை சொல்லிக்கிட்டேயிருந்தால் இவரோட நோக்கம்தான் என்ன..?
இவர் சொல்றாரு, ‘நான் கர்நாடகக்காரன். இங்கேயிருந்து காசையெல்லாம் அங்க கொண்டு போயிட்டேன்’னு.. நான் அரசியல் பேச வரலை. ஆனா அவர்தான் அரசியல் பேசியிருக்காரு. அரசியல் பண்றாரு.. இங்க வந்து கர்நாடகம், தமிழ்நாடுன்னு பேசவே முடியாது. நான் தமிழ்ல இதுக்கு முன்னாடியும் படங்களை தயாரிச்சிருக்கேன்.  
இந்த ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பின்போது யார்கிட்டேயும் அஞ்சு காசு கடன் வாங்காமல் முழுக்க, முழுக்க என்னுடைய சொந்த பணத்தை போட்டுத்தான் தயாரிச்சேன். யார்கிட்டயாவது கடன் வாங்கிட்டா அப்புறம் அவங்களுக்கு பதில் சொல்லணுமேன்ற எண்ணத்துலதான் இப்படி செஞ்சேன்..
கடந்த புத்தாண்டு தினத்தன்று ரஜினி ஸாரை அவரோட வீட்ல சந்திச்சு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கிட்டேன். அப்போ அவர்கிட்ட ‘ஸார் இது மாதிரி திருச்சி டிஸ்டிரிபியூட்டர் ஒருத்தர் பேட்டியெல்லாம் கொடுத்திருக்காரு. நெட்ல இருக்கு.. பார்த்தீங்களா?’ன்னு கேட்டேன். அதுக்கு ரஜினி ஸார், “ஓ.. நானும் பார்த்தேன். ஒரு மாசம் போகட்டும். அப்புறம் மேல் அவங்களை கூப்பிட்டு அவங்களை திருப்திபடுத்துற மாதிரி செஞ்சு அனுப்பலாம்.. ஒண்ணும் பிரச்சனையாகாது’ன்னு சொன்னார். அவரே சொல்லிட்டாரேன்னு நானும் அமைதியா இருந்தேன்.
ஆனா இந்த சிங்காரவேலன் ஸார் திரும்பத் திரும்ப பிரச்சினையைக் கிளப்பி.. படத்திற்கெதிரா ஒரு பிரச்சாரத்தையே கிளப்பிட்டாரு.. இதுதான் எனக்கு ரொம்ப வேதனையைத் தந்தது.. இந்தப் படம் எத்தனை கஷ்டப்பட்டு.. எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கியதுன்னு அவர் கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தாரா..?
ரஜினி ஸார் எப்பேர்ப்பட்டவர்..? இந்திய சினிமாவுக்கே ஒரு அடையாளம் அவர். அவரை போயி வாய்க்கு வந்தபடி பேசினா எப்படி..? அப்படி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு..? இந்தப் படத்தை நான் அவரோட ஒரு ரசிகனாத்தான் தயாரிச்சேன். லாபம் நிறைய கிடைக்குமேன்னு நினைச்சு தயாரிக்கலை.. என் தலைவன்.. என் ரஜினி ஸார்.. அவர் படத்தைத் தயாரிக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்.. அவர் படத்தைத் தயாரிக்க பல பேர் இருக்கும்போது அவர் என்னைக் கூப்பிட்டு ‘இந்தப் படத்தை நீங்க தயாரிங்க’ன்னு சொன்னது நான் செஞ்ச புண்ணியம்..
இவ்வளவு தூரம் ரஜினி ஸாரையே அசிங்கப்படுத்தறவங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணணுமான்னு யோசிக்க வேண்டி வந்திருச்சு.. அந்த நேரத்துல வேறொரு காரணத்துக்காக திரும்பவும் ரஜினி ஸாரை சந்திச்சேன். அவர் அப்போ கே.பி. ஸார் இறந்த டென்ஷன்ல மூட் அவுட்ல இருந்தாரு. அப்பவும் நான் இந்த சிச்சுவேஷனை சொல்லி ‘என்ன ஸார் பண்றது..? எனக்கு ஒண்ணுமே புரியலை. அந்த விநியோகஸ்தர் ஏன் இப்படி செய்றாருன்னு எனக்குத் தெரியலை’ன்னு சொன்னேன். அப்போ ரஜினி ஸார், ‘நானும் கேள்விப்பட்டேன். நீங்கதான் படத்தோட தயாரிப்பாளர்.. இனிமே நீங்களே முடிவெடுத்துங்க.. என்ன முடிவெடுத்தாலும் சரி’ன்னுட்டாரு.. ‘என் மனசுக்கு பிடிக்கலை ஸார்.. இவ்ளோ தூரம் நம்மள பத்தி பேசினவங்களுக்கு நாம எதுக்கு ஹெல்ப் செய்யணும்..? என்னால முடியாது’ன்னு சொல்லிட்டேன்.
இப்போ சிங்காரவேலன் ஸார் சொல்றாரு.. படத்தோட விற்பனை 220 கோடி. படத்தோட பட்ஜெட் 45 கோடி. மிச்சமெல்லாம் லாபம்னு.. அவர்கிட்ட நான் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கிறேன்.
நீங்க ஒரு பத்து பேரை கூட்டிட்டு வாங்க.. இந்தப் படத்தோட பட்ஜெட் 45 கோடி.. வித்தது 220 கோடின்னு நீங்க சொன்னதுக்கு ஆதாரத்தை அவங்ககிட்ட காட்டுங்க.. அந்த 10 பேரும் அதைப் பார்த்துட்டு ‘ஆமா.. இது உண்மைதான்’னு சொல்லிட்டாங்கன்னா நீங்க எவ்வளவு தொகையை நஷ்டஈடா கேக்குறீங்களோ அத்தனையையும் நான் உங்களுக்கு அந்த இடத்துலேயே தரேன்.
அதுக்கு மாறா.. நீங்க கொடுக்குற ஆதாரம் பொய்யுன்னா அந்த இடத்துலேயே நீங்க இதுவரைக்கும் செஞ்சதெல்லாம், பேசினதெல்லாம் தப்புன்னு சொல்லி நீங்க மன்னிப்பு கேக்கணும். தயாரா..?
இந்த கோரிக்கையை அவங்க ஒரு மாசம் கழிச்சுதான் எழுப்பியிருக்கணும். அதுதான் நியாயம். அதையும் முறைப்படியான வழில செஞ்சிருக்கணும். இதுதான் சரியான முறையா..? இப்படித்தான் கேட்பதா..?
நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. ஆனா இப்போ அவங்க கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்’னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்த்து. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.
இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசிவரைக்கும் அவர் தரவேயில்லை. வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..
அவர் சொல்றாரு.. நான் ஏதோ முறைகேடா கோடி, கோடியா சம்பாதிச்ச காசுலதான் படம் தயாரிக்கிறேன்னு.. நான் பிலிம் இண்டஸ்ட்ரில 32 வருஷமா இருக்கேன்.  கன்னடத்துல 31 படங்களை தயாரிச்சிருக்கேன். யாரும் என்னை பத்தி இதுவரைக்கும் இப்படி சொன்னதில்லை. இவர் சொல்லும்போது நான் ஒண்ணு யோசிக்க மாட்டேனா..?
சிங்காரவேலன் ஸாரை பார்த்தாலே சின்ன வயசு மாதிரி தெரியுது.. அப்புறம் எப்படி அவருக்கு இவ்வளவு பணம் வந்தது..? கப்பல்ல வேலை பார்த்து சம்பாதிச்சேன்னு சொல்றாரு.. அப்போ நானும் சொல்லலாம்ல.. அவரும் கப்பல்ல வேலை பார்க்குறேன்னு சொல்லிட்டு நாடு, நாடா போயி கொள்ளையடிச்சு வந்த காசைத்தான் இதுல கொட்டியிருக்காருன்னு.. சிங்காரவேலன் ஸார்.. கொஞ்சம் அளவா பேசுங்க.
சிங்காரவேலன் எதுக்காக இதை பெரிய பிரச்சினையாக்குகிறார்ன்னு எனக்குத் தெரியலை. ஒருவேளை இதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கான்னும் எனக்குத் தெரியலை. ஆனா அவருக்கு மீடியால முகம் தெரியணும்.. பெரிய ஆளாகணும்.. நம்மள பத்தி பரபரப்பா பேசணும்ன்ற மீடியா வெறி இருக்கும் போலிருக்கு.
அவர் முறைப்படி இந்தப் பிரச்சினையை அணுகியிருந்தால் இதற்கொரு தீர்வை நானே முன் வந்து சொல்லியிருப்பேன். ஆனா இப்போ முடியாது. நீங்க சட்டப்படி இந்த விஷயத்தை சந்திக்கணும்னு நினைத்தால் நானும் ரெடி.. சட்டப்படியே கோர்ட்டில் இந்தப் பிரச்சினையை சந்திப்போம்..” என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி முடித்தார் வெங்கடேஷ்.
இடையில் ரஜினியை பற்றிக் குறிப்பிட்டபோது சட்டென்று கண் கலங்கி அழுதுவிட்டார். மிகுந்த எமோஷனலாக இருந்த அவரது பேச்சு முழுவதுமே ரஜினியை அவமானப்படுத்திவிட்டார்கள் என்கிற விஷயத்தையே மையமாக்க் கொண்டிருந்தது.
“படத்தின் தயாரிப்புச் செலவுதான் என்ன..?” என்று கேட்டதற்கு, “அதை நான் சொல்ல மாட்டேன். என்னிக்குமே நான் தயாரிக்கும் படத்தின் செலவுக் கணக்கை வெளில சொல்ல மாட்டேன். அது எனக்குப் பழக்கமில்லை..” என்று சொல்லி மறுத்துவிட்டார். பின்பு நாம் என்னதான் எழுதுவது..?
“இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டே செல்வதால் ரஜினியின் இமேஜுக்கு கெட்ட பெயர்தானே..?” என்று கேட்டதற்கு, “அதுக்காகத்தான் ஸார் எல்லாருமே முயற்சி செஞ்சோம். ஆனா அவர் ஏதோ ஒரு அரசியலுக்காக இத்தனை தூரம் இழுத்துவிட்டார்..” என்றார்.
இவருக்குப் பின் பேச வந்த வேந்தர் மூவிஸ் சி.இ.ஓ. டி.சிவா, விநியோகஸ்தர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு நஷ்டஈடு கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு உதவும்படி தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்ள.. ஒரு கணம் திகைத்துதான் போனோம்.  எதிர்பார்க்காத ஆண்ட்டி கிளைமாக்ஸாக இருந்தது தயாரிப்பாளர் சிவாவின் நாகரிகமான பேச்சு..
இரண்டே பேர்தான் பேசினார்கள். ஒருவர் ‘கோர்ட்டுக்கு வா. சந்திப்போம்’ என்கிறார். இன்னொருவர் ‘பேசித் தீர்த்துக்கலாம். நஷ்டஈடு கொடுத்துவிடுவோம்’ என்கிறார். இது இப்போது ஈகோ பிரச்சினையாகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.
தயாரிப்பாளர் டி.சிவா மிகவும் பொறுமையாக விநியோகஸ்தர்கள் சார்பாக அவர்களது கோரிக்கையையும், வேந்தர் மூவிஸின் நிலைப்பாட்டையும் தயாரிப்பாளரிடம் மேடையிலேயே தெரிவித்தார். தயாரிப்பாளர் வெங்கடேஷின் முடிவு என்ன என்பதை இதற்கு பின்பு அவர் சொல்லவில்லை.
ரஜினி தலையிடாவிட்டால் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்றைக்கு உண்ணாவிரதம் இருந்த விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த சங்கமோ அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வழியில்லாமலும், மனமில்லாமலும் இருதலைக் கொள்ளி எறும்பு போல தத்தளிக்கிறது.
தயாரிப்பாளர் வெங்கடேஷோ விநியோகஸ்தருக்கு சவால் விட்டு பேச்சுக்கு அழைக்கிறார். ஆனால் மீடியாக்கள் தயாரிப்பு செலவு பற்றி கேட்டால் சொல்ல மறுக்கிறார். சிங்காரவேலனே தயாரிப்பு செலவு, விற்பனை பற்றியெல்லாம் மீண்டும் கேள்வியெழுப்பினால் தயாரிப்பாளர் என்ன சொல்வார்..? என்ன செய்வார்..?
இதிலெல்லாம் ஈகோ பார்த்தால், இது முடிகிற விஷயமல்ல.. விட்டுக் கொடுத்தலால்தான் முடியும். மேலும், மேலும் பிரச்சினையை வளர்ப்பதைவிட்டுவிட்டு சமாதானமாக செல்வதே தமிழ்த் திரையுலகத்திற்கு நல்லது..!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top