லிங்கா படம் சரியில்லை, நஷ்டம் என்றெல்லாம் சில விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்யக் காரணம் நடிகர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தூண்டுதல் ஏதுமில்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
லிங்கா படம் பல ஊர்களிலும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரத்திலேயே இந்தப் படம் நஷ்டம் என்றும், படம் சரியில்லை, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது, ரஜினிக்கு சினிமா போக்கு தெரியவில்லை என்றெல்லாம் விமர்சித்தனர்.
இதனை படம் வெளியான ஆறாவது நாள், அதாவது டிசம்பர் 18-ம் தேதியிலிருந்து தொடர்ந்து செய்து வந்தனர்.
இது லிங்கா படத்தை பாதித்தது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே அதைக் கொன்றுவிட்டதாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இன்னொரு பக்கம் லிங்கா படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக நடிகர் விஜய்யும் அவரது ஆட்களும் மறைமுகமாக வேலைப் பார்ப்பதாகவும், அவர்கள் தூண்டுதலால்தான் இந்த விநியோகஸ்தர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர்.
ரஜினியின் இடத்தை அடையவே அவர் இப்படிச் செய்கிறார் என்றும் கூறப்பட்டது. இதனை நேற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் செய்தியாளர்கள் நேரடியாகவே கேட்டுவிட்டனர். ஆனால், இதனை அவர்கள் மறுத்தனர். இந்தப் பிரச்சினைக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.
லிங்கா விவகாரத்தை தினமும் பேசி வரும் சிங்கார வேலன் என்ற விநியோகஸ்தர், இரு தினங்களுக்கு முன்பு வரை ரஜினி பாடலை ரிங் டோனாக வைத்திருந்ததாகவும், ஆனால் இப்போது விஜய்யின் வசனத்தை ரிங்டோனாக்கிவிட்டதாகவும், அதனால்தான் இப்படிக் கேட்க நேர்ந்தது என்றும் செய்தியாளர்கள் பிரஸ் மீட்டில் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment