மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க நாடாளுமன்றில் கிண்டலடித்தார்.
பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிப் பேசி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கின்றது.
இலங்கையில் தனிநபர் ஒருவரின் வருமானம் 35,000 ரூபா என்று மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண அரச ஊழியர் ஒருவருக்கு இந்தச் சம்பளம் கிடைப்பதில்லை. புகையிரத நிலைய ஊழியர் ஒருவருக்கு 21,000 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதில் 19,000 ரூபா மட்டுமே அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும்.
அதில் மின்சாரக் கட்டணம் 2,000 ரூபா, தண்ணீர் கட்டணம் 1,000 ரூபா, போக்குவரத்துச் செலவு 6,000 ரூபா என 9,000 ரூபா செலவாகின்றது. எஞ்சியிருக்கும் 10,000 ரூபாவில்தான் உணவு, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட ஏனைய செலவுகளைப் பார்க்கவேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் நூற்றுக்கு 50 வீதமான மக்கள் ஒருவேளை உணவு உண்ணமுடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது.
மலசலகூடத்துக்குள் சென்ற பெண்ணொருவர் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். ஏன் எனக் கேட்டால் உள்ளே ஒருவர் இருக்கின்றார் என்றார். யார் இருக்கின்றார் என்று உள்ளே சென்று பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட் உள்ளே இருந்தது.
உள்ளே எவரும் இல்லை. அது ஜனாதிபதியின் கட்-அவுட்டே உள்ளது என்று அந்தப் பெண்ணிடம் கூறினோம்” எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment