‘பாபா’ பட தோல்விக்குப் பின்னர் நடந்த ‘சந்திரமுகி’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. நான் யான அல்ல; குதிரை. கீழே விழுந்தாலும் சட்டென எந்திரிச்சிடுவேன். எனவே மீண்டும் வீரத்தோடு வருகிறேன்” என்றார்.
ரஜினியின் இந்த பேச்சை காப்பியடித்து, கொஞ்சம் உல்டா செய்து, காங்கிரஸ் மேடையில் முழங்கி இருக்கிறார் “சுதந்திரப் போராட்ட வீராங்கனை” நடிகை குஷ்பு.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்றார். திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அதுபோல் காங்கிரஸ் கூட்டம் என்றாலே அவ்வளவாக ஆர்வம் காட்டாத பொதுமக்களும், குஷ்பு பங்கேற்றதால் எப்போதும் இல்லாத வகையில் கும்பலாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் தலைவர் தங்கபாலு, வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார், முன்னாள் எம்.பி.க்கள் ஆருண், மாணிக் தாகூர்ஆகியோர் கலந்துகொண்டனர்.
வழக்கமான உற்சாகத்துடன் குஷ்பு மைக்கை பிடிக்கவும் கூட்டத்தில் கிளம்பிய விசில் சத்தத்தையும், கைத்தட்டல் சத்தத்தையும் கேட்டு, மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே நடப்பது நம் கட்சி கூட்டம்தானா? என்ற சந்தேகம் வந்ததைப் போன்று, திகைப்புடன் பார்த்தனர். ஆனால் அதில் மகிழ்ச்சி ரேகை தென்பட்டது. தனது வழக்கமான உற்சாகத்துடன் பேச்சை தொடங்கிய குஷ்பு கூறியதாவது:-
வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு மருமகளாகி தமிழ் கத்துக்கிட்டு தப்பு இல்லாமல் ஓரளவு தமிழ் பேசுறேன்னு சொன்னால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் மறைந்த தலைவர் காமராஜரும், பாரதியாரும் சந்தோஷப்படுவார்கள். கர்மவீரர் காமராஜர் பிறந்து வளர்ந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.
எல்லோரும் ஏன் கட்சி மாறீனீர்கள்? என்று கேட்கின்றனர். நம்முடைய நல்ல கொள்கைகளை மாற்றிக் கொள்வது நல்லதா?அல்லது நம்முடைய நல்ல கொள்கைகளுக்கு இடம் தராத கட்சியில் இருப்பது நல்லதா?நான் அந்த கட்சியில் இருந்து மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.
நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்துவிட்டுத் தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப் போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நமக்கு பேச்சுரிமை, கருத்துரிமையைப் பெற்று தந்தது காங்கிரஸ் கட்சி. நான் இன்றைக்கு சுதந்திரமாக எனது கருத்தை தைரியமாகப் பேசுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான். இதில் இருந்துதான் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் எல்லாம் வந்தது. ஏன்… தமிழகத்தில்கூட திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் எல்லாம் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவைதான். தி.க. எதில் இருந்து வந்தது? நீதிகட்சியில் இருந்து வந்தது. அந்த நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது. எனவே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆணிவேர் காங்கிரஸ் கட்சிதான். இதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி மறுத்தால் இப்பவே என் பெயரை மாற்றிக் கொண்டு இந்த மேடையை விட்டு போய் விடுகிறேன்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டது. பா.ஜ.க. மக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலின்போது என்ன சொன்னார்கள்?காஷ்மீர் பிரச்னையை தீர்ப்போம், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம், கறுப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரைககும் எதையாவது செய்திருக்கிறார்களா? மோடி மஸ்தான் வேலை காட்டி ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி, மக்களை பற்றி சிந்திககாமல் ஆஸ்திரேலியா, பிரேசில், பூடான் என்று உலக நாடுகளில் சுற்றுலா சென்று வருகிறார்.
இந்தியாவில் தூங்கிக கொண்டிருககிற மககளை எழுப்பி சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திரிக்க நேரம் அதிகமாகும். ஆனால் பந்தயக் குதிரை. கீழே விழுந்தால் மறுநிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை. அது சீக்கிரம் எழுந்து நாட்டைக் காக்கும். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்க எல்லோரும் பாடுபடுவோம். கண்டிப்பாக நமது லட்சியம் நிறைவேறும்” என்றார் குஷ்பு.
0 comments:
Post a Comment