↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும், என் நெருங்கிய நண்பருமான ருத்ரையா இன்று (18-11-2014)மாலையில் இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். இந்தச் செய்தி என் காதில் வந்து செய்தி அது. அந்தச் சமயத்தில் என் மனம் முழுக்க ருத்ரையா ஆக்கிரமித்திருந்தார். என் மனதில் வேறு எந்த எண்ணங்களும் உண்டாகவில்லை. என் மனம் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.விழுந்தபோது, உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சிறிதும் எதிர்பார்க்காத செய்தி அது.அந்தச் சமயத்தில் என் மனம் முழுக்க ருத்ரையா ஆக்கிரமித்திருந்தார். என் மனதில் வேறு எந்த எண்ணங்களும் உண்டாகவில்லை. என் மனம் பின்னோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
1978 ஆம் வருடம். அப்போது நான் மதுரையில் இருந்தேன். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் எம்.ஏ.படித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ‘அவள் அப்படித்தான்’ படம் திரைக்கு வந்தது.
மதுரை பழங்கானத்திலிருந்த ஜெகதா திரையரங்கில் அந்தப் படத்தை நான் பார்த்தேன். அந்தப் படத்தில் நடித்திருந்த கமல்ஹாசன்,ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மூவரும் (ஏற்கனவே) நடித்திருந்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விட்டிருந்தது. அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பற்றிப் பரவலாக சிறப்பாக எழுதியிருந்தார்கள். ருத்ரையா என்ற இளம் இயக்குநரைப் பற்றி பாராட்டி எழுதியிருந்தார்கள். நான் ஆர்வத்துடன் படம் பார்க்கச் சென்றதற்கு இவையெல்லாம்தான் காரணங்கள்.
திரையரங்கில் பெரிய அளவில் கூட்டமில்லை. மிகவும் குறைவாகவே ஆட்கள் வந்திருந்தார்கள். எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. தமிழில் உருவான மிகச் சிறந்த படங்களில் அது ஒன்று என்ற எண்ணம் அப்போதே என் மனதில் உண்டாகி விட்டது.படத்தின் மையக் கதாபாத்திரமான பெண் பாத்திரம் மிகவும் மாறுபட்ட தன்மை கொண்டதாகவும்,நவீன சிந்தனை கொண்டதாகவும், துணிச்சல் நிறைந்ததாகவும், எதற்கும் கலங்காததாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
தமிழ்ப் படங்களில் நான் அதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரமாக அது இருந்தது. கமல் ஏற்று நடித்த கதாபாத்திரம் முரண்பாடுகள் நிறைந்த இன்றைய இளைஞனை அப்படியே நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது. ரஜினி ஏற்று நடித்த எந்தவித பாசாங்கும் இல்லாத,வெளிப்படையான கதாபாத்திரம் கூட புதுமையானதே. படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வரும் சரிதா யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரம்.
படத்தில் ஒரு சிறு குறை கூட எனக்கு தெரியவில்லை.’யார் இந்த ருத்ரையா? இவ்வளவு அருமையாக படத்தை இயக்கியிருக்கிறாரே!’ என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்தேன். அப்போதே எனக்கு அவர் மீது உயர்ந்த மரியாதை உண்டாகி விட்டது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் வரும் ‘ஒரு கதை இன்று முடியலாம். முடிவிலும் ஒன்று தொடரலாம்…இனி எல்லாம் சுகமே!’ என்ற வரிகள் இப்போது கூட என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கமல் தன் சொந்தக் குரலில் பாடிய ‘பன்னீர் புஷ்பங்களே’ என்ற பாடல் எப்போதும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும்.

என்னதான் பத்திரிகைகள் பாராட்டி எழுதியிருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் ‘அவள் அப்படித்தான்’படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பின் மீது எனக்கு மன நிறைவு உண்டாகவில்லை. இன்னும் பெரிய அளவில் மக்கள் அந்தப் படத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.
அதற்குப் பிறகு சில மாதங்களில் நான் சென்னை வந்து விட்டேன்.இங்கு வந்து ‘சாவி’, ‘பிலிமாலயா’ ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். 1980 ஆம் வருடத்தில் ‘கிராமத்து அத்தியாயம்’ என்ற படத்தை ருத்ரையா இயக்கி, தயாரித்து வெளியிட்டார். ‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு இசையமைத்த இளையராஜாதான் ‘கிராமத்து அத்தியாயம்’ படத்திற்கும் இசையமைப்பாளர்.
‘ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது’ என்ற ஒரு இனிமையான பாடலை அந்தப் படத்தில் இடம் பெறச் செய்திருந்தார் இளையராஜா. கிருஷ்ணவேணி திரையரங்கில் நான் படத்தைப் பார்த்தேன். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கூச்சலும்,கேலியும்,கிண்டலும் காதைக் கிழித்தன. மிகவும் மெதுவாக நகர்ந்த அப்படம் மக்களுக்கு பிடிக்கவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது இந்தப் படம் ஓடாது என்று. அதே போல படம் ஓடவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ‘வசந்தம் வருகிறது’ என்ற பத்திரிகைக்காக நாங்கள் ருத்ரையாவை பேட்டி காணச் செல்கிறோம். நாங்கள் என்றால் நான், ஜவகர். சிகாமணி, ராஜய்யா, முத்தையா ஆகியோர். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருந்த வேளையில் அந்தப் பேட்டி.எல்லா கேள்விகளுக்கும் எந்தவித பதட்டமோ, கவலையோ இல்லாமல் பதில் கூறினார் ருத்ரையா.
பேட்டி நடைபெற்ற இடம் அவரின் அலுவலகம் இருந்த ஆழ்வார்பேட்டை. பேட்டி முடிந்ததும் ருத்ரையாவின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட மனிதன் என்ற முறையில், அருகில் அமர்ந்து “சார்.,நீங்கள் இயக்கிய முதல் படமான ‘அவள் அப்படித்தான்’ மிகச் சிறந்த ஒரு படமாக இருந்தது. அந்தப் படத்தில் உங்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தாலும்,இன்னும் உயர்வான வரவேற்பு அதற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
‘கிராமத்து அத்தியாயம்’ படத்தை நானும் பார்த்தேன். படம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்ததால்,மக்கள் படத்தை ரசிக்கவில்லை. தமிழக மக்கள் பொதுவாகவே வேகமாக இருந்தால்தான் படத்தை ரசிப்பார்கள். அதனால், இனி படத்தை இயக்கும்போது சற்று வேகம் இருப்பது மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் நலம் விரும்பி என்ற முறையில் நான் இதை கூறுகிறேன்…” என்றேன் நான். அதற்கு ருத்ரையா “இது என் பணம்.அதை எப்படி வேண்டுமானாலும் வீணாக்குவேன்…” என்றார். அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை.
வருடங்கள் கடந்தோடின.1987ஆம் ஆண்டு. அப்போது நான் ரகுவரனுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்தேன். ரகுவரனை வைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணத்துடன் ருத்ரையா வந்தார். ஒரு இசைக் கலைஞனை மையமாக வைத்து பண்ணப்பட்ட கதை. ருத்ரையா ரகுவரனிடமும், என்னிடமும் கதையைக் கூறினார். கதை ஏ-ஒன்! எங்கள் இருவரையும் ருத்ரையா, லாய்ட்ஸ் காலனியிலிருந்த தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு ஆங்கில புதினத்தின் மேலட்டையைக் காட்டி, அதில் வரையப்பட்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைக் காட்டி, அதுதான் ரகுவரனின் கெட்-அப் என்று கூறினார்.
அதற்குப் பிறகு ருத்ரையாவும், நானும் அடிக்கடி சந்திப்போம். பல மணி நேரங்கள், பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம். இன்னும் சொல்லப் போனால்… நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டோம். ஒருநாள் பழைய சம்பவத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். “நான் அப்படியெல்லாமா கூறினேன்?” என்றார் ருத்ரையா சிரித்துக் கொண்டே.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.எனினும்,எனக்கும், ருத்ரையாவுக்குமிடையே இருந்த நட்பு தொடர்ந்தது.
சில வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்க ருத்ரையா முயற்சித்தார். ஆனால், அதுவும் செயல் வடிவத்திற்கு வரவில்லை.
வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தன.நானும்,ருத்ரையாவும் சந்தித்து, நீண்ட காலமாகி விட்டன. சிறிதும் எதிர்பாராமல் ஒரு நாள் அவரை மந்தைவெளி ‘சிருங்கேரி மடம்’ இருக்கும் தெருவில் பார்த்தேன். தன் வீடு அங்குதான் இருக்கிறது என்று கூறி,என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். எனக்கு காபி கொண்டு வந்து கொடுக்க,நான் பருகினேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு,மேலும் சில வருடங்கள் வேகமாக பாய்ந்தோடின. ஒருநாள் நான் அப்போது ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த இயக்குநர் மகேந்திரனைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருந்தேன். வழியில் ருத்ரையாவைப் பார்த்தேன். சற்று மெலிந்து போய்க் காணப்பட்டார். “சார்…எவ்வளவோ வருடங்கள் ஓடி விட்டன. இப்போது கூட ஒன்றுமில்லை. நீங்கள் ஏதாவது முயற்சி செய்து பாருங்கள்…” என்றேன் நான். “ஏதாவது பண்ண வேண்டும்…” என்றார் அவர்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒருநாள் ருத்ரையா எனக்கு ஃபோன் பண்ணினார். “நாளை காலையில் நாம் அவசியம் சந்திக்க வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும்…” என்றார். மறுநாளே நானும், அவரும் மயிலாப்பூர் ‘சங்கீதா ஹோட்டலி’ல் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசினோம்.
வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் வகையிலும், இன்றைய ரசிகர்கள் ரசிக்கிற மாதிரியும் ஒரு திரைக்கதையை முழுமையாக எழுதி வைத்திருப்பதாக கூறிய அவர், அருமையாக தட்டெழுத்து செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்டிருந்த திரைக்கதையை என் கையில் தந்தார். “நீங்கள் முழு கதையையும் இப்போதே கேட்டால் நன்றாக இருக்கும்.கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா?”என்று கேட்டார். “இப்போதே கேட்கிறேன் சார்…” என்றேன் நான்.
இருவரும் அவருடைய லாய்ட்ஸ் காலனி வீட்டிற்குச் சென்றோம்.இப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய மனைவி அவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டதாகக் கூறினார். தன் மனைவியைப் பற்றி மிகவும் உயர்வாகப் புகழ்ந்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் மிகவும் விளக்கமாகக் கதையைக் கூறினார். உண்மையிலேயே இன்றைய தலைமுறை ரசிக்கக் கூடிய அளவிற்கு மிகவும் அருமையாக திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரையா. நான் மனம் திறந்து அதைப் பாராட்டினேன்.
“இதை எப்படியாவது நடிகர் விக்ரமிடம் கூற வேண்டும்…” என்றார். நான் விக்ரமின் மேனேஜர் ‘கிரி’யிடம் இது சம்பந்தமாக பேசினேன். இது நடந்தது சில மாதங்களுக்கு முன்பு.”வெளிநாட்டில் நடைபெறும் ‘அய்’ படத்தின் ஷூட்டிங்கில் விக்ரம் சார் இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகு நிச்சயம் உங்களையும், விக்ரம் சாரையும் சந்திக்க வைக்கிறேன். அதற்குப் பிறகு அவர் தீர்மானிக்கட்டும்…”என்றார் கிரி, நேரடியாக ருத்ரையாவிடமே.
காலம் அப்படியொரு சந்திப்பிற்கே வழி உண்டாக்கித் தரவில்லை என்பதுதான் விந்தையே.

இதற்கிடையில் ஒருநாள் எனக்கு ருத்ரையா எஸ்.எம்.எஸ்.பண்ணியிருந்தார். நான் மொழி பெயர்த்திருந்த ‘வின்சென்ட் வான்கா’ தன் தம்பி ‘தியோ’விற்கு எழுதிய கடிதங்களைக் கொண்ட நூலை இரண்டாவது முறையாக வாசித்ததாகவும், இப்போதும் தன் கண்களில் அரும்பிய கண்ணீரை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகம் ஒரு மிகச் சிறந்த இயக்குநரை இழந்து விட்டது. நான் என் மீது அன்பு வைத்திருந்த… என்னுடன் உண்மையான நட்புடன் பழகிய ஒரு மதிப்பிற்குரிய நண்பரை இழந்து விட்டேன்.
இப்போதும் எனக்குப் புரியாத புதிர்… கடந்த 34 வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் ருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது? இன்னும் எவ்வளவோ வருடங்கள் உயிருடன் இருப்பார் என்று நினைத்து, இத்தனை வருடங்களில் அவருடன் ஒரு புகைப்படம் கூட நான் எடுத்துக் கொள்ளவில்லையே!?
எது எப்படியோ… ருத்ரையாவின் புன்னகை தவழும் முகம் என் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரின் குரல் என் இறுதி மூச்சு நிற்கும் வரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top