‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று ஆந்திராவைச் சேர்ந்த இணை இயக்குனர் புகார் செய்திருப்பதால், அவருக்கு நியாயம் கிடைக்கும் வரை ‘கத்தி’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவோ, ரீமேக் செய்யவோ கூடாது; ஏ.ஆர்.முருகதாஸை வைத்து யாரும் தெலுங்கில் படங்கள் தயாரிக்கக் கூடாது; விஜய் நடிப்பதற்கு தெலுங்குப் படங்களின் ரீமேக் ரைட்ஸை யாரும் கொடுக்கக் கூடாது என்று தெலுங்கு திரையுலகம் அடுக்கடுக்காக தடைகள் விதித்துள்ளது.
விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தின் கதை தொடர்பான சர்ச்சை, கன்னித்தீவாக நீண்டுகொண்டே போகிறது.
மீஞ்சூர் கோபி என்பவர் ‘கத்தி’ கதைக்கு உரிமை கொண்டாடியதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட மீஞ்சூர் கோபி விவகாரம், தற்போது சற்றே அடங்கி உள்ள நிலையில், இதோ இப்போது… புதிய சர்ச்சை!
ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவ் என்பவர் ‘கத்தி’ படத்தின் கதைக்கு உரிமை கோரி இருக்கிறார்.
இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநர்களில் ஒருவரான இந்த நரசிம்மராவ், ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்திலும் பணியாற்றி இருக்கிறார். அப்போது விஜய்யுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரிடம் நரசிம்மராவ் ஒரு கதை சொன்னாராம்.
நரசிம்மராவ் சொன்ன கதையில் மிகவும் இம்ப்ரஸ்ஸான விஜய், ‘நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் மீண்டும் மீண்டும் அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி கேட்டாராம். இப்படி நான்கு முறை விஜய்யிடம் கதை சொன்னாராம் நரசிம்ம ராவ்.
கதை மிகவும் நன்றாக இருப்பதாக சொன்ன விஜய், ஒரு கட்டத்தில், “கதையை மட்டும் கொடுங்க.. வேறு பெரிய டைரக்டரை வச்சு பண்ணலாம்” என்று கேட்டாராம். அதற்கு நரசிம்மராவ் உடன்படவில்லையாம். எனவே, “ஓகே. விரைவில் நாம் சேர்ந்து படம் பண்ணலாம்” என்று சொன்னாராம் விஜய்.
அந்தக் கதைதான் ‘கத்தி’ படத்தின் கதை என்பது நரசிம்மராவ் தரப்பு வாதம்.
நரசிம்மராவ் நாலு தடவை சொன்ன கதையை மூளைக்குள் ஏற்றி, மனப்பாடம் செய்து கொண்ட விஜய், அதை அப்படியே ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லி, ‘கத்தி’யாக சாணை பிடித்திருக்கிறார் என்பது அவரது குற்றச்சாட்டு!.
தன்னுடைய கதைதான் ‘கத்தி’ படமாக தயாராகிறது என்பது, ஆந்திராவில் இருந்ததால் நரசிம்மராவுக்கு தெரியவில்லையாம். ‘கத்தி’ படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்காக, டப்பிங் செய்யப்பட்டபோதுதான், சிலர் மூலம் நரசிம்மராவுக்கு தகவல் கிடைத்ததாம். உடனடியாக கத்தி படத்தைப் பார்த்த நரசிம்மராவ் அதிர்ச்சி அடைந்தாராம்.
விஜய்யை தொடர்பு கொண்டு நியாயம் கேட்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே ஹைதராபாத்தில் உள்ள ‘தெலுங்கு பிலிம் ரைட்டர் அஸோஸியேஷனில்’ நரசிம்மராவ் புகார் கொடுத்திருக்கிறார்.
விஜய்யிடம் சொன்ன (‘கத்தி’) கதையை 2010 ஆம் வருடம் இதே அஸோஸியேஷனில் பதிவு செய்தும் வைத்திருக்கிறாராம் நரசிம்மராவ். அதுமட்டுமல்ல, பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களிடம் இந்த கதையை கடந்த நான்கு வருடங்களாக நரசிம்மராவ் சொல்லி வந்திருக்கிறாராம். அப்படி கதை சொல்லப்பட்டவர்களில் தாசரி நாராயணராவும் ஒருவர். எனவே இந்த பிரச்சனையை தாசரியிடம் கொண்டு சென்றிருக்கிறார் நரசிம்மராவ்.
‘கத்தி’ படத்தைப் பார்த்த தெலுங்கு திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள், நரசிம்மராவின் கதையிலிருந்து 80 சதவிகித காட்சிகள் படத்தில் உள்ளதை உறுதி செய்துள்ளனராம். எனவே இவரது புகாரில் நியாயம் உள்ளது என்ற அடிப்படையில், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நரசிம்மராவின் புகாரை அனுப்பி உள்ளனர்.அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இந்தப் பிரச்சனையில் நரசிம்மராவுக்கு நியாயம் கிடைக்கும் வரை ‘கத்தி’ படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடவோ, ரீமேக் செய்யவோ கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸை வைத்து யாரும் தெலுங்கில் படங்கள் தயாரிக்கக் கூடாது என்றும், விஜய் நடிப்பதற்கு தெலுங்குப் படங்களின் ரீமேக் ரைட்ஸை யாரும் கொடுக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா? என அறிய ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு பிலிம் ரைட்டர் அஸோஸியேஷனை தொடர்பு கொண்டபோது, அனைத்து தகவல்களும் உண்மை என்று அவர்கள் உறுதி செய்தனர்.
புகார் கொடுத்திருக்கும் நரசிம்மராவுடன் தொடர்பு கொண்டபோது, ”இந்த விவகாரத்தை தாசரி சார் போன்ற பெரியவர்கள் டீல் பண்ணுகிறார்கள். அதனால்தான் கோர்ட்டுக்குக்கூட போகவில்லை. அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டதால் நான் வெளிப்படையாக பேச முடியாது.. சில நாட்கள் பொறுத்திருங்கள்” என்றார் நரசிம்மராவ்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment