எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது. என்ற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம் மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம்.
தனியார் பள்ளிகூடங்களை எல்லாம் அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை சொல்ல காரணம் என்ன ?
மே மாதம் வந்தாலே நிறைய பெற்றோர்கள் ஸ்கூல் பீஸ் கட்ட ஆலாய்ப் பறக்கிறதை பார்த்திருக்கிறேன். சினிமா தொழிலாளர்கள் நிறைய பேர் பீஸ் கட்ட உதவி கேட்டு வருவதை தொடர்ந்து பார்த்திருக்கிறேன் பாவமாக இருக்கும். கல்விங்கிறது அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சி.
ஒருத்தனின் வளர்ச்சியையும், வருங்காலத்தையும் பணம் என்கிற காரணத்தைக் காட்டி தடுக்க நினைப்பது பாவமில்லையா ! வசதியான வீட்டில் பிறந்த குழந்தைகளை விட ஏழை குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.
அந்த ஏழை குழந்தைக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இந்த பதிவு.
சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாமே!
உண்மை தான் நல்ல கருத்தை நல்ல கருத்தாக சொல்ல முற்பட்டால் டாக்குமென்டரி பீலிங் வந்துவிடும். அதற்காகத் தான் கமர்ஷியல் பார்முலாவை புகுத்தினேன். அதுதான் இன்று வெற்றியை கொடுத்திருக்கிறது. நான் நடிகனாக மட்டும் யோசிக்க வில்லை இரண்டு பெண்களுக்கு தகப்பனாகவும் யோசித்தேன்.. வசதி இருந்ததால் தான் என் மகள்களை படிக்க வைத்தேன்.. வசதி இலையென்றால்…. நான் அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன்.
ஜெய்ஹிந்த் – 2 அனுபவம் எப்படி ?
ஒன் மேன் ஆர்மி என்பார்களே! அப்படிதான் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என நான்கு பக்கம் யோசிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிக்காகவும் உழைக்க வேண்டும் அப்பாடா என்று ஆகிவிட்டது. படம் வெளியாகி வெற்றி என்று ஆன பிறகு பட்ட கஷ்டமெல்லாம் சந்தோஷமாகி விட்டது.
அடுத்த படம் பற்றி …
நிறைய பெற்றோர்கள் ஜெய்ஹிந்த் -2 படத்தை பார்த்து பாராட்டுகிறார்கள். அதனால் அடுத்தும் வேறொரு அழுத்தமான கதை களத்தோடு விரைவில் துவங்க உள்ளோம். பணம் மட்டுமே நிறைவை தராது. சமூகத்துக்கு நல்லதை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த போகிறேன் என்றார் பெருமிதத் தோடு அர்ஜுன்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment