↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திட்டமிடுதல் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் குறைவு. ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டு, தயாரிப்பாளர் தேடுவார்கள். தயாரிப்பாளரை பிடித்து விட்டு ஹீரோக்கள் பின்னால் அலைவார்கள். படத்தை ஆரம்பித்துவிட்டால் ஏரியா விற்று பணம் வந்து விடும், கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அவசர கோலத்தில் படத்தை தொடங்கிவிடுவார்கள். பின்னர் இதில் சிக்கல் ஏற்பட்டு படம் பாதியிலேயே நிற்கும். மேலும் பணம்போட்டு படத்தை எடுக்க முடியாது. எடுத்த வரை செலவான பணத்தை மீட்கவும் முடியாது.

சினிமா மற்ற தொழிலகளிலிருந்து வித்தியாசமானது. ஒரு கடை வைத்து நட்டமாகிவிட்டால் தட்டுமுட்டு சாமான்களை விற்றாவது இழந்த பணத்தில் கொஞ்சம் திருப்பி எடுக்கலாம். கட்டிய கட்டிடம் இடிந்து விட்டால்கூட நிலையையும், ஜன்னலையும் விற்று பணம் எடுக்கலாம். ஆனால் சினிமாவில் போட்ட பணத்தை மட்டும் எடுக்கவே முடியாது. எல்லா பணமும் பிலிமில், (இப்போது டிஜிட்டலில்) படமாக இருக்கும் பாதி படத்தை எதுவும் செய்ய முடியாது.

இப்படி பாதியில் நிற்கும் படங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்களை சேர்த்தால் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். சமீபகாலமாக தொடங்கப்பட்டு பாதியில் முடங்கிப்போன சில படங்களை பார்க்கலாம்.

ஜெமினி பிலிம்ஸ் எடுத்த படம் மதகஜராஜா. விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்தனர். கலகலப்பு ஹிட் கொடுத்த கையோட சுந்தர்.சி இயக்கி படம் முழுசா முடிந்தும், அந்த நிறுவனத்திற்கு இருக்கும் கடன் பிரச்னையில் வெளிவராமல் இருக்கிறது. இதேப்போல் ஆதி, ராஜ்கிரண் நடித்த சரித்திரம் என்ற படத்தை தயாரிப்பாளரிடமிருந்து வாங்கிய ஒரு தனியார் டி.வி. நிறுவனம் வெளியிட முடியாமல் கிடப்பில் போட்டுவிட்டது. சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்க ஜெய் நடித்த படம் அர்ஜுனன் காதலி அப்படியே நிற்கிறது.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் ஜீவன், மேக்னா நடித்த கிருஷ்ணலீலையும், தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகாக நடித்த களவாடிய பொழுதுகளும் ஐங்கரன் நிறுவனத்தின் கையில் சிக்கி வெளிவராமல் இருக்கிறது. பி.வாசுவின் மகன் ஷக்தி நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன், கள்ளச்சிரிப்பழகா படங்கள் என்ன காரணத்தாலோ இன்னும் வெளிவரவில்லை. திரிசக்தி சுந்தர்ராமன் தயாரிப்பில் சரத்குமார், சினேகா நடித்த விடியல் படம் பாதி முடிந்த நிலையில் முடங்கிக்கிடக்கிறது.

சூர்யாவின் சென்னையில் ஒரு மழைக்காலம், செல்வராகவனின் மாலைநேரத்து மயக்கம், சிம்பு நடித்த சட்டென்று மாறுது வானிலை, விக்ரம் நடித்த கரிகாலன், அரவிந்த்சாமி நடித்த இன்ஜினீயர், விதார்த், ஸ்ரீதிவ்யா நடித்த காட்டுமல்லி, தருண் கோபி நடித்த சரவண குடில் மற்றும் பேச்சியக்கா மருமகன், குலசேகரனும் கூலிப்படையும், கருப்பர் நகரம் உள்ளிட்ட பல படங்களில் பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் முடங்கிக் கிடக்கின்றன.

இவையெல்லாம் சமீபகால உதாரணங்கள். கமலஹாசனின் மருத நாயகம், ரஜினியின் ராணாவிலிருந்து ஆரம்பித்தால் ஒட்டு மொத்தமாக இந்த படங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். இவை பாதியில் நிற்பதற்கு காரணம் முன்பு சொன்னதைப்போல சரியான திட்டமிடல் இன்றி தொடங்கப்பட்டதுதான்.

"சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை தொடங்கினார் கவுதம் மேனன். என்ன காரணத்தாலோ அந்தப் படத்தை பாதியில் விட்டுவிட்டு நீதானே என் பொன்வசந்தம் எடுத்தார், அது படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு அவர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். தயாரிப்பில் உதவியவர்கள் பிரிந்து போனார்கள். எனவே சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கலாம் என்று சிம்புவை வைத்து சட்டென்று மாறுது வானிலை படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அஜீத் கவுதம் மேனனுக்கு கைகொடுக்க முன்வர... சிம்பு படத்தை அப்படியே போட்டுவிட்டு என்னை அறிந்தால் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார். இப்படி எந்த திட்டமிடலும் இல்லாமல் இருப்பதுதான் படங்கள் பாதியில் நிற்பதற்கு காரணம்" என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

அடுத்து படம் வெளியிடுவதில் உள்ள சிக்கல். நான்கு கோடியில் படம் எடுத்தால் 2 கோடியில் விளம்பரம் செய்ய வேண்டிய நிலை. ஒரு படம் முடிந்து பெட்டியில் கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சும்மா கிடக்கிற படத்தை ரிலீஸ் செய்யலாமே என்றால் அதற்கு யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். காரணம் போஸ்ட்டர் ஒட்டுகிற, விளம்பரம் செய்கிற செலவாவது கிடைக்கும் என்ற உத்தரவாதம்கூட இல்லை. இதனால்தான் முடிந்த பல படங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் மூலம் பாதியில் நிற்கும் படத்தை முடிக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் முடிந்த படத்தையாவது ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் இப்போது தயாரிப்பாளர் சங்கமும் பலவீனமாக இருக்கிறது. இதனால் வீட்டை விற்று காட்டை விற்று படத்தை எடுத்த பல தயாரிப்பாளர்களின் பணம் பிலிமாக மாறி செல்லரித்துக் கொண்டிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top