‘‘சூப்பர்ஸ்டார், ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிக்குமார், ரத்னவேலுன்னு பெரிய டீம்ல நான் எப்படி? என்னால இன்னும் நம்ப முடியலீங்க!’’ - பிரமிப்பு விலகாமல் இருக்கிறார் அமரன்... ‘லிங்கா’ படத்தின் ஆர்ட் டைரக்டர்.
‘‘படத்துக்கு சாபுசிரில் சார்தான் புரொடக்ஷன் டிசைனர். அவர்கிட்ட இருந்து திடீர்னு ஒருநாள் போன். ‘இந்தப் படத்துக்கு நீதான் ஆர்ட் டைரக்டர்’னார். என்னைப் பார்த்த ரவிக்குமார் சார், ‘இவன் பேசவே மாட்டானே... எப்படி வேலை வாங்குவான்’னு சாபு சார்கிட்ட கலாய்ச்சார்.
கனவு மாதிரி வந்து சேர்ந்துடுச்சு இந்த வாய்ப்பு’’ - பளிச் புன்னகை அமரனிடம்!‘‘என்னோட ஒரிஜினல் பேரு ஆனந்த். சொந்த ஊர் திருச்சி. டிராயிங்ல ரொம்ப ஆர்வம். பி.ஆர்க் முடிச்சி, மும்பை ஐ.ஐ.டில மாஸ்டர் ஆஃப் டிசைன் பண்ணினேன். அப்ப, ஃபிலிம் மேக்கிங் புராஜெக்டிற்காக சாபுசிரில் சார்கிட்ட வொர்க் பண்ணினேன். படிப்பு முடிஞ்சு அவர்கிட்டயே ஜாயின் பண்ணிட்டேன். ஆனந்தை ‘அமரன்’ ஆக்கினதும் அவர்தான். ‘ஜித்தன்’ படம் மூலம் ஆர்ட் டைரக்டர் ஆனேன்.
அந்தப் படத்துல மிஷ்கின் கோ-டைரக்டர். அவர் வெளியே வந்து ‘சித்திரம் பேசுதடி’ பண்ணினதில் இருந்து, ‘யுத்தம் செய்’வரை அவர்கிட்ட தொடர்ந்து 6 வருஷம் வேலை பார்த்தேன்!’’‘‘ ‘லிங்கா’ பீரியட் ஃபிலிம் ஆச்சே... ஆர்ட் டைரக்ஷன் சவாலா இருந்திருக்குமே?’’
‘‘உண்மைதான். 1930 காலகட்டத்துக்கான கதை. அதுக்கு என்னென்ன தேவைன்னு பக்காவா ரிசர்ச் பண்ணி, களத்துல இறங்கினோம். மைசூர், ஹைதராபாத்னு லொகேஷன் கூட கவனமா தேடிப் பிடிச்சோம். எல்லா சீன்லயும் பழைய காலத்து பொருட்களா பயன்படுத்தணும். அந்தக் காலத்துக் காரெல்லாம் முழுக்க மரக்கட்டையில் இழைச்சுப் பண்ணியிருக்காங்க.
எல்லாம் வெளி நாட்டு இறக்குமதி. பீரியட் ஃபிலிம்ஸ் நிறைய பண்ணின அனுபவம் கொண்ட சாபு சார் என்னை நல்லா கைட் பண்ணினார். படத்துல அணைக்கட்டு ஒண்ணு மெயினா வருது. தேடிப் பார்த்தப்ப ஷிமோகா பக்கம் நாங்க நினைச்ச மாதிரியே ஒரு டேம் இருந்தது. ஆச்சரியம் என்னன்னா அதோட பேர் ‘லிங்கனமக்கி’. அந்த டேமை மாடலா வச்சு ஹைதராபாத்ல பிரமாண்ட டேம் செட் ஒண்ணு போட்டிருக்கோம்.
ஒரு டேம் கட்டுறதுக்கு என்னென்ன டெக்னாலஜி யூஸ் பண்ணியிருப்பாங்கனு தேடித் திரட்டிய தகவல்களை வச்சு, செட் போடுறதுக்கு முன்னாடி ஒரு புத்தகமே போட்டோம். அது ரொம்ப உதவுச்சு. டேம்ல கிட்டத்தட்ட 20 நாள் ஷூட்டிங். டேம் செட் ரெடியானதும், முதல் நாள் ரஜினி சார் ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தார். அவர் முகம் மலர்ந்துச்சு. அதை வச்சே ‘செட் ஓகே’ன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
ஷிமோகாவில் லிங்கேஸ்வரா கோயில் இருக்கு... இதுவும் தற்செயலா அமைஞ்சது ஆச்சரியத்தின் உச்சம். ஸோ, நாங்க சிவன் கோயில் செட் ஒண்ணும் போட்டிருக்கோம். ஒரிஜினல் கோயில்னு நினைச்சு, அந்த ஊர் மக்கள் லிங்கத்துக்கு தேங்காய், பழம் எல்லாம் உடைச்சு, நிஜ கோயிலாவே ஆக்கிட்டாங்க...’’
‘‘ரஜினி...’’‘‘ஷிமோகாவில் நாங்க ஷூட்டிங் போனப்போ பயங்கர மழை. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரஜினி சார் ரெடியாகி ஸ்பாட்ல வந்து நிப்பார். ‘ஒரு லுங்கி இருந்தா குடுங்க’ன்னு கேட்டு, ஸ்பாட்லயே காஸ்ட்யூமை சேஞ்ச் பண்ணுவார். ‘டேம்ல இருந்து கேரவன் போயிட்டு வர்ற டைம்ல காஸ்ட்யூம்ஸ் வீணாகிடும்.. டைம் வேஸ்ட்டாகும்... மத்தவங்க வெயிட் பண்ண வேண்டி வரும்’னு ரஜினி சார் சொன்னதைக் கேட்டு பிரமிச்சிட்டேன்.
ஷிமோகாவில் ஷூட் பண்ணின எந்த ஃபிரேமிலும் மழை பெய்ததுக்கான அடையாளமே தெரியாது. ‘வேற யாராவதா இருந்திருந்தா, பேக் அப் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க... ரவிக்குமார் ரியலி கிரேட்!’னு ரஜினி சாரே டைரக்டரை பாராட்டினார். கேமராமேன் ரத்னவேலுவும் ரஜினி சாரும் திக் ஃப்ரெண்ட்ஸ்.
ரஜினி சாரை இன்னும் க்யூட்டா காட்டுறது எப்படின்னு எப்பவும் ரத்னவேலு யோசிச்சிட்டே இருப்பார். ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் லீ விட்டேகர் பத்தி சொல்லியே ஆகணும். ஸ்பாட்ல அவர் நுழைஞ்சாலே, டீ கொடுக்கிற பையன்ல ஆரம்பிச்சு கார்ப்பென்டர் வரை எல்லாருக்குமே பாராட்டு மழைதான்.
அனுஷ்காவோட அப்பாவா கே.விஸ்வநாத் சார் நடிச்சிருக்கார். கிட்டத்தட்ட 90 வயசு இருக்கும். கொட்டுற மழையில நனைஞ்சிக்கிட்டு இந்த வயசிலும் வொர்க் பண்ணியிருக்கார். வில்லனா நடிக்கிற ஜெகபதிபாபு செட்கிட்ட வந்து, ‘இது எப்படி பண்ணுனீங்க?’, ‘இந்த மெட்டீரியல் எங்கே கிடைக்கும்’னு ஆர்வமா விசாரிப்பார்.
ரஜினி சாருக்கு ‘மோனா கேசோலினா...’ சாங்ல அனுஷ்காவோட டூயட்; ‘என் மன்னவா...’ பாட்டுல சோனாக்ஷியோட டூயட்... ரெண்டு பாட்டுக்கும் பிரமாண்ட செட் போட்டோம். ஒவ்வொரு பாட்டையும் பத்து பத்து நாள் ஷூட் பண்ணினோம். ‘பாட்டுகள் பிரமாண்டமா வந்திருக்கு’ன்னு ஷங்கர் சாரே சொன்னார்!’’‘‘கே.எஸ்.ரவிக்குமார்...’’
‘‘ ‘லிங்கா’ வாய்ப்பு கிடைச்சதுக்காக சாபுசிரில் சார், படத்தோட புரொடியூசர், ரவிக்குமார் சார் இவங்க 3 பேருக்கும் முதல்ல நன்றி சொல்லிக்கறேன். செட்ல ரவிக்குமார்கிட்ட அதிகமா திட்டு வாங்கின ஆளு நான்தான். அப்படி அவர் திட்டி வேலை வாங்கலைன்னா, இவ்ளோ சீக்கிரம் படம் ரெடியாகியிருக்குமாங்கறது டவுட்தான்.
கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் எல்லாரும் ரஜினி சாரோட போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அப்போ நான் ஓரமா ஒதுங்கி நின்னுட்டிருந்தேன். என்னை புடிச்சு இழுத்து, ‘நீதான் என்கிட்டே அதிகமா திட்டுவாங்கியிருக்கே... என் பக்கத்துல நில்லு’னு சொல்லி என்னை ரஜினி சார் கூட போட்டோ எடுத்துக்க வச்சார். அந்த அன்பை நினைக்கிறப்ப சந்தோஷம்தான்!’’
‘கிரேன் அசிஸ்டென்ட் ஜவஹர்னு ஒருத்தர் ரஜினி சாரோட உயிரைக் காப்பாத்தினாராமே? அன்னிக்கு ஸ்பாட்ல என்ன நடந்தது?’’
‘‘ஆமாம். ரயில்வே ஸ்டேஷன் செட்... செயற்கை மழைன்னு பரபரப்பா வொர்க் பண்ணிட்டிருந்தோம். ரஜினி சார் நடந்து வர்ற சீன்... மழை ஷாட்னால, செட் ஃபுல்லா தண்ணீர். தரையெல்லாம் சேறும் சகதியுமா இருந்துச்சு. தண்ட வாளம் கூட தண்ணிக்குள்ள மூழ்கிடுச்சு. கரன்ட் கேபிள் எப்படியோ எர்த் ஆகி, க்ரேன் தண்டவாளத்துல பட்டுடுச்சு. அதனால ஜவஹரை எர்த் அடிச்சு தூக்கி வீசிடுச்சு.
கிரேன் ரஜினி சார் ஃபேஸுக்கு நேரே நெருங்க நெருங்க, அவருக்கு ஷாக் அடிச்சிடக் கூடாதுன்னு, எர்த் அடிச்சதையும் பொருட்படுத்தாமல், கிரேனை வேற பக்கமா தொட்டுத் திருப்பினார் ஜவஹர். அதுல மறுபடி ஷாக் அடிச்சு தூக்கி வீசப்பட்டுட்டார். ரவிக்குமார் சார், ரஜினி சார் எல்லாரும் பதறிட்டாங்க. ‘ஜவஹரை நிறைய தடவை திட்டியிருக்கேன். ஆனா, அதையெல்லாம் பொருட்படுத்தாம என் மேல பாசம் வச்சு, வேலை பார்த்திருக்கான்...’னு ஆடியோ ஃபங்ஷன்ல கூட கே.எஸ்.ஆர் நெகிழ்ந்தது இதனாலதான்!’’
0 comments:
Post a Comment