தற்போது உலகில் எயிட்ஸ் பரவாமல் தடுக்கும் பொறிமுறைகளை இன்னும் வலுப்படுத்தி அத்தியாவசியமான அனைத்து சேவைகளும் வழங்கப் பட்டால் 2030 ஆண்டளவில் உலகில் எயிட்ஸ் நோய் தொற்றுதலை முற்றாக வெற்றி கொண்டு விட முடியும் என ஐ.நா இன் உலக எயிட்ஸ் தடுப்பு அமைப்பான UNAIDS இன் பிரதான இயக்குனர் மிக்கெல் சிடிபே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
UNAIDS இன் இந்திய பத்திரிகை அறிக்கைப் படி ஆசியாவில் மிகப் பெரிய எயிட்ஸ் தொற்றும் நாடாக இந்தியா விளங்குவதாகவும் 2013 ஆண்டு புள்ளி விபரப்படி இந்தியாவில் 2.1 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கை பயமுறுத்துவதாக அமைந்திருந்த போதும் கடந்த 30 வருடங்களாக உலகில் எயிட்ஸ் பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப் பட்ட கடும் முயற்சி ஏற்படுத்திய முன்னேற்றம் 2030 இற்குள் இத்தொற்றை முற்றாகக் கட்டுப் படுத்த முடியும் என்ற நம்பிக்கையை தமக்குத் தந்திருப்பதாக மிக்கெல் சிடிபே தெரிவித்துள்ளார்.
2005 முதற்கொண்டு இந்தியாவில் புதிதாக எயிட்ஸ் தொற்றும் வீதம் 19% ஆல் குறைந்திருப்பதாகவும் 36% வீதமான மக்கள் தற்போது உயிர் காப்பு சிகிச்சை பெற்று வருவதகவும் எயிட்ஸ் நோய் தொடர்பான மரணங்கள் 38% வீதத்தால் குறைந்திருப்பதாகவும் UNAIDS இன் பத்திரிகை அறிக்கை தெரிவிக்கின்றது. இன்று டிசம்பர் 1 உலக எயிட்ஸ் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மிக்கெல் சிடிபே வெளியிட்ட வீடியோ செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், 'உலகினைத் தற்போது அச்சுறுத்தி வரும் எபோலா தொற்று எயிட்ஸ் நோய்ப் பரவத் தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தை நினைவுறுத்துவதாக உள்ளது. அப்போதும் மக்கள் அச்சமடைந்தும் தம்மை வெளியுலகில் இருந்து மறைத்து வாழவும் செயற்பட்டனர். எயிட்ஸ் தொற்று உடையவர்கள் களங்கம் உடையவர்களாகக் கருதப் பட்டு பாகுபடுத்தப் பட்டனர். அக்காலத்தில் நோயின் வீரியத்தைத் தடுக்கக் கூடிய எந்தவித மருந்துகளோ அல்லது தொற்றினைத் தடுக்கக் கூடிய இன்றைய வழிமுறைகளோ காணப் படவில்லை.
ஆனால் இப்போது நிலமை பெரிதும் மாறி விட்டது! எயிட்ஸுக்குப் பலியாகவிருந்த மில்லியன் கணக்கான மக்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இதற்கு நாங்கள் உலகமயமாக்கல், சமூக அணி திரட்டல் மற்றும் பொதுமக்கள் சமூக விழிப்புணர்வு என்பவற்றுக்கே நன்றி கூற வேண்டும்.' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment