உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தை உக்ரைனைச் சேர்ந்த போர் விமானம் தாக்கியதாக ரஷ்ய தொலைக்காட்சி சேனல் புகைப்படத்துடன் கூடிய செய்தியை ஒளிபரப்பியுள்ளது. ஆனால் இது பொய் என்று பலரும் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கிழக்கு உக்ரைனில் ரஷ்ய புரட்சிப்படை ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.
மலேசிய விமானத்தை உக்ரைனின் போர் விமானம் தான் தாக்கியது என்று ரஷ்யா தெரிவித்தது. ஆனால் உக்ரைனோ மலேசிய விமானத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை வீசி ரஷ்ய புரட்சிப்படை தான் தாக்கியது என்றது. இதை அமெரிக்காவும் உறுதிபடுத்தியது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒட்நாகோ என்ற செய்தி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் மலேசிய விமானத்தை உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் தாக்கியதாகக் கூறி அதற்கான புகைப்படங்களையும் காண்பித்தனர். அந்த புகைப்படங்கள் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் படித்தேன் என்று கூறிக்கொள்ளும் ரஷ்ய நிபுணரான ஜார்ஜ் பில்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளரான டிமிட்ரி போரிசோவ் கூறுகையில், மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டுத்தள்ளப்பட்டபோது வெளிநாட்டு உளவு செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றார். இது குறித்து ரஷ்ய ரேடியோ நிலையத்தில் பணிபுரியும் வர்ணனையாளரான ஆன்ட்ரே மென்ஷெனின் கூறுகையில், டிவியில் காட்டப்பட்ட புகைப்படங்கள் உண்மையாக இருக்காது. அதில் உள்ள இடம் விமானம் தாக்கப்பட்ட இடம் இல்லை என்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த புலன்விசாரணை பத்திரிக்கை இணையதளமான பெல்லிங்கேட்டில் கூறியிருப்பதாவது, இது பொய்யான புகைப்படங்கள். அது 2012ம் ஆண்டு கூகுள் எர்த் புகைப்படங்கள் என்றார். ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் மலேசிய விமானம் தாக்கப்பட்டது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் கடும் விமர்சனத்திற்குள்ளானதற்கு முன்பாக இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment