லிங்கா படத்தின் கதை யாருடைய கதையிலிருந்தும் எடுக்கப்பட்டதல்ல , இந்த வழக்கில் தனது பெயரை வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே லிங்கா படத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் இருவேடங்களில் நடித்து, அவரது பிறந்த நாளன்று வெளியாகவிருக்கும் படம் லிங்கா.
படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இப்படம் தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “யுட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த எனது ‘முல்லைவனம் 999′ என்ற திரைப்படத்தின் கதையைத் தழுவித்தான் லிங்கா படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் விசாரணைக்கு வந்தது.
எதிர்மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், படத்தின் நாயகன் ரஜினிகாந்த் ஆகியோர் நவம்பர் 19க்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கதாசிரியர் பொன்குமார் ஆகியோர் நேற்று, 18ம்தேதி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். ரவிக்குமார் தாக்கல் செய்திருந்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைச் சார்ந்து லிங்கா படத்தின் கதை இருப்பதால், அந்தக் கதை என்னுடையது என மனுதாரர் கூற முடியாது. அவரது கதையை நான் திருடியதாகக் கூறுவதை மறுக்கிறேன்.
பென்னி குயிக்கின் வாழ்க்கை வரலாற்றுக்கு யாரும் உரிமை கோர முடியாது. லிங்கா படத்தைப் பொறுத்தவரை இன்னும் கதை முழுமையாக வெளியாகவில்லை. அனைவரும் யூகத்தில்தான் உள்ளனர். அடிப்படை கதை பொன்.குமரனுக்கு சொந்தமானது. பொன்.குமரன் அவரது கதையை ‘கிங்கான்’ என்ற பெயரில் தென்னிந்திய திரைப்பட கதாசிரியர் சங்கத்தில் 15.10.2010ல் பதிவு செய்துள்ளார்.
மனுதாரர் குறிப்பிட்டது போல நாங்கள் எந்த தவறிலும் ஈடுபடவில்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று கூறப்பட்டிருந்தது.
ரஜினி மனு
இந்நிலையில் வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரஜினிகாந்த் இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “படம் வெளியாகாத நிலையில், லிங்கா கதையை மனுதாரர் எப்படி தெரிந்து கொண்டார்? இந்த படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் நான் கிடையாது. நான் நடிகன் மட்டுமே. அப்படியிருக்கும்போது எனது பெயரை வழக்கில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் எனது பெயரையும் வழக்கில் இணைத்துள்ளார் மனுதாரர். லிங்கா கதை எதிலிருந்தும் திருடப்பட்டது கிடையாது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விசாரணை வரும் 24ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
..........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment