↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இயக்குநர் மிஷ்கின் அஞ்சாத சிங்கமாக மீண்டும் ‘பிசாசு’வை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார் கோடம்பாக்கத்திற்கு..!
படத்தில் புதுமுக நடிகர் நாகா ஹீரோவாகவும், பிரயகா அறிமுக நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியன் பாடல் எழுதியிருக்கிறார். கோபிநாத் எடிட்டிங் செய்திருக்கிறார். நேதன் லீ சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று இரவு தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் பாலாவின் வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்த பின்பு 7.15 மணிக்குத்தான் விழா துவங்கியது.
முதலாவதாக திரையிடப்பட்ட டீஸர் அக்மார்க் மிஷ்கினின் படைப்புதான். சந்தேகமேயில்லை. அதே வைட் ஆங்கிள் ஷாட்ஸ்.. டைட் குளோஸப் ஷாட்ஸ்.. அவருக்கே உரித்தான மஞ்சள் லைட்டிங்ஸ்.. மிரட்டிய இசை.. நடிப்பு ராட்சஷர்களாக இருந்த நட்சத்திரங்கள்.. கதை என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத எடிட்டிங்.. அனைத்தும் கச்சிதம்..!
மேடையேறும்போது ஹீரோ நாகா, ஹீரோயின் பிரயாகா இவர்களுடன் புதுமுக இசையமைப்பாளர் அரோல் கரோலி இயக்குநர் மிஷ்கனின் காலைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் சென்றார்கள். இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் உள்ளதாம். அந்தப் பாடலை எழுதி கோடம்பாக்கத்தில் புதிய கவிஞராக அறிமுகமாகியுள்ளார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.
பேச வந்தவர்களெல்லாம் 2 நிமிடங்களுக்குள் தங்களது பேச்சை முடித்துக் கொள்ள மிஷ்கின் மிக விரைவில் மைக்கை பிடித்தார். ஒரு நாள் திடீரென்று என் ஆபீஸுக்கு வான்னு சொன்னார் பாலா. போனேன். இப்ப என்ன பண்ற என்றார். அடுத்த படத்துக்கான முயற்சிகள் நடந்துக்கிட்டிருக்குன்னு சொன்னேன். நாளைக்கு நல்ல ஸ்கிரிப்டோட வா.. நான் தயாரிக்கிறேன். நீ பண்ணிக் கொடுன்னு கேட்டார். நிச்சயமா நான் இதை மறக்கவே மாட்டேன். ஒரு கிரியேட்டர்.. இன்னொரு கிரியேட்டரை.. அதுலேயும் தடுக்கு விழுந்தவரை தூக்கி நிறுத்துறது எங்கேயும் பார்க்க முடியாதது. என் நண்பர் பாலா அதை எனக்காக செஞ்சிருக்கார்.  அவருக்கு என் நன்றி..
இந்தப் படம் பேய் படம்தான்னாலும் நீங்கள் இதுவரைக்கும் பார்த்த பேய் படங்களைவிட அதிகம் வித்தியாசங்கள் உண்டு.. இதுலேயும் மந்திரவாதிகளெல்லாம் இருக்காங்க. வருவாங்க. ஆனா அது வேற மாதிரியான சிச்சுவேஷனா இருக்கும். படத்தோட மையக் கருத்தை சொல்லிட்டனா படமே தெரிஞ்ச மாதிரி ஆயிரும். படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.
படத்துக்கு கேமிராமேனா பி.சி.ஸ்ரீராமைத்தான் கேட்டேன். நான் இப்போ நிறைய கமிட்மெண்ட்ல இருக்கேன். நீ ரவிசங்கரை வைச்சுக்க.. அவன் நல்லா பண்ணுவான்னு சொன்னார். அதுக்கப்புறம்தான் வைட் ஆங்கிள் ரவிசங்கர் வந்தார். நான் திரைக்கதை எழுதத் துவங்கிய நாள்ல இருந்தே அவரும் என்கூடவே இருந்தாரு.. மொத்த ஸ்கிரிப்டையும் முன்னாடியே படிச்சிட்டு அதுக்கேத்தாப்புல அவரும் தயாரா இருந்தாரு. உழைப்பு.. அப்படியொரு உழைப்பை எனக்கு ஈக்குவலா கொட்டியிருக்காரு ரவிசங்கர்.  அவருக்கு எனது நன்றி..!
இசையமைப்பாளர் பாய், தலகாணியோட என் ஆபீஸுக்கு வந்து குடியிருந்துட்டான். எந்நேரமும் கீபோர்டை பக்கத்துல வைச்சு ஏதாவது நோட்ஸ் ரெடி பண்ணிக்கிட்டேயிருப்பான். ராத்திரி 2 மணி ஆனாலும் ஏதாவது சந்தேகம் வந்தா டக்குன்னு போன் செஞ்சு கேப்பான். இதுனால எனக்கு ராத்திரில எப்பவுமே யாரோ கதவைத் தட்டுற மாதிரியே சத்தம் கேட்டுக்கிட்டேயிருந்தது.. என்னை கவர்ந்த முதல் இசையமைப்பாளர் இளையராஜாதான். அவருக்கு பின்னாடி என்னை ஈர்த்தவன் இந்தத் தம்பிதான்..” என்றார் மிஷ்கின்.[ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தோட பிரஸ்மீட்ல இசையமைப்பாளர் கே-யைப் பற்றி இதேபோல் சொன்னதாக ஞாபகம்]
சுவாரஸ்யமில்லாமல் இருந்த அரங்கத்தை இயக்குநர் பாலா மைக் அருகில் வந்து கலகலப்பாக்கினார். ஆனாலும் ஒரேயொரு வருத்தம்.. பத்திரிகையாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் எடக்கு, மடக்காகவே பதிலளித்ததுதான் வருத்தத்தைத் தந்தது.
பிசாசு என்ற பெயரில் இருக்கும் பேய் நல்ல பேயா.. கெட்ட பேயா என்கிற கேள்வியிலேயே 10 நிமிடங்கள் ஓடின. அவருடைய திடீர் கடவுள் நம்பிக்கையை பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தெளிவாக பதில் சொல்லாமல் நழுவினார். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்றார். சாமி கும்பிடுவது இருக்கும்வரையிலும் கோவில் இருக்கும். இரண்டுமே தவறு என்றார். ஆனால் பிசாசு படத்தின் பூஜையை தடபுடலாக தனது அலுவலகத்தில் நடத்தி பரிவட்டமெல்லாம் கட்டி பக்தி மயமாக நிகழ்ச்சியை நடத்தியது குறித்து எதுவும் சொல்லவில்லை..
“இனிமேல் வருடத்திற்கு மூன்று படங்களைத் தயாரிப்பேன். நான் ஒரு படத்தை இயக்குவேன்..” என்றார். இணையவுலகத்தில் விமர்சகர்கள் திரைப்படங்களை விமர்சிப்பதை தவறு என்றார் மிஷ்கின். இது பற்றி பாலாவிடம் கேட்டபோது, “விமர்சகர்கள்ன்னு ஒருத்தங்க இருந்தா விமர்சிக்கத்தான் செய்வாங்க. அதைச் செய்யக் கூடாதுன்னு யாரும் சொல்ல முடியாதே..” என்றார்.
முத்தாய்ப்பாக பாலா சொன்ன முத்தான வார்த்தைகள், “முன்னாடில்லாம் மிஷ்கின் ரொம்பப் பேசுவான். நான்தான் அவன்கிட்ட ‘கொஞ்சம் அடக்கி வாசிடா..  நாம செயல்லதான் காட்டணும்.. பேச்சுல காட்டக் கூடாது’ன்னு சொன்னேன். இன்னிக்கு என்னாச்சுன்னு தெரியலை.. கொஞ்சமா பேசிட்டுப் போயிட்டான்..” என்றார்.
அவர் சொன்னது போலவே இந்த விழாவில் மிஷ்கின் பேசியது கொஞ்சம்தான்.. இதுவே நல்லாயிருக்கு..!
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top