↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு எல்லாம் கருத்து சொல்ல மாட்டேன். இந்த கேள்வியை ரஜினியிடம் போய் கேளுங்கள்' என்று வைகோ கூறியுள்ளார். 

சென்னை, பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், கடந்த 2008ம் ஆண்டு ‘ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 

இந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கூறி அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் ஏற்கனவே, நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

இதையடுத்து, அவரிடம் வைகோ தரப்பு வக்கீல் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார். இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். 

இன்ஸ்பெக்டரிடம், குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நார்வே அரசு உதவி செய்துள்ளது. 

புலிகளுக்கு எதிராக போர் நடத்த முடிவு செய்தபோது, உங்களால் முடியாது என்று இலங்கை அரசிடம் நார்வே மந்திரி கூறினார் என்றெல்லாம் பேசியுள்ளார். 

அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய பல போர்களில், தோல்வியடைந்து புறமுதுகு காட்டி ஓடியது. விடுதலைப்புலிகளை அவர்களால் வெற்றிப் பெறவே முடியவில்லை. 

ஆனால், இந்தியாவை ஆண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசான காங்கிரஸ், முப்படை தளபதிகளையும், ஆயுதங்களையும் இலங்கைக்கு அனுப்பி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்தி, லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது என்பது இப்போது உண்மை என்றாகி விட்டது. 

இந்தியா உதவி செய்யாமல் இருந்திருந்தால், இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடியாது. 

இந்தியா உதவி செய்ததால், ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் என்று 7 அணுஆயுத வல்லரசு நாடுகள், இலங்கைக்கு உதவியது. 

இதனால், பல லட்சம் தமிழர்கள் இறந்தனர். இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சி, சில அரசியல் புரோக்கர்களை இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்சேவுடன் நெருக்கம் காட்டுகிறது. 

தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவரிடம், ‘மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன்தானே கூட்டணி வைத்துள்ளீர்கள்?' என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு வைகோ, ‘கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி தவறு செய்தால், அதை நாங்கள் விமர்சிப்போம். கண்டனம் தெரிவிப்பேன்' என்றார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார் உடனே வைகோ, ‘இந்த கேள்விக்கு எல்லாம் கருத்து சொல்ல மாட்டேன். இந்த கேள்வியை அவரிடம் போய் கேளுங்கள்' என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.  
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top