இந்தியாவுடன் ஐந்து போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியது ஒரு கெட்ட கனவு போல உள்ளது என்று புலம்புகிறார் இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜெயசூர்யா. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இரு தரப்பு ஒருநாள் போட்டியொன்றில் ஐந்து போட்டிகளிலும் இலங்கை தோற்பது அதன் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்.
இதுகுறித்து தேர்வு குழு தலைவர் ஜெயசூர்யா அளித்த பேட்டி: இலங்கை அணி, இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்று நான் நம்பியிருக்கவில்லை. அதே நேரம் தனது முழுமையான திறமையை காண்பித்து விளையாடி, இந்தியாவுக்கு தக்க போட்டி கொடுக்கும் என்று நான் எதிர்பார்த்தது பொய்த்துவிட்டது. இந்தியாவிடம் இலங்கை வீரர்கள் மொத்தமாக சரணடைந்துவிட்டனர். இந்திய வீரர்கள் போல இலங்கை பேட்ஸ்மேன்களும் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடியிருக்க வேண்டும். முதல் 4 இடங்களுக்குள் இறங்கும் ஏதாவது ஒரு வீரராவது 40 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் வெற்றிபெற முடியும். உலக கோப்பை தொடர் துவங்க சிறிது காலமே உள்ள நிலையில் இலங்கை இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் கவலை அளிக்கிறது. இந்தியாவுடனான தொடர் ஒரு கெட்ட கனவைப்போலவே உள்ளது.
இருப்பினும் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இலங்கை விளையாட உள்ளதால், அந்த தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தால் உலக கோப்பைக்கு தயாராக வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். தோல்வியடைந்துள்ள இந்த நேரத்தில்தான் இலங்கை வீரர்களு்கு ரசிகர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். வீரர்களை ஒரேடியாக விமர்சனத்திற்கு உள்ளாக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயசூர்யா தெரிவித்தார். அதிரடி ஆட்டக்காரராக விளங்கிய ஜெயசூர்யா இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர். மொத்தம் 7 செஞ்சுரிகள் அடித்துள்ள ஜெயசூர்யா அதில் அதிகபட்சமான 189 ரன்னை இந்தியாவுக்கு எதிராகவே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment